×

சுகாதார மேற்பார்வையாளர், கிராம செவிலியர்களுக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி

திருச்சி : திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் சுகாதார மேற்பார்வையாளர், கிராம சுகாதார செவிலியர்களுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.திருச்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையில் பணியாற்றும் சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் கிராம சுகாதார செவிலியர்களுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் நடைபெற்ற பயிற்சியில் குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன் திறன் வளர்ப்பு பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

குழந்தை நலக்குழு உறுப்பினர்கள் பவுலின், சோபியா ராணி, சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு, ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு (அரசாணை எண் 30/2020)படி ஊராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள் விவரம், அவர்களின் பொறுப்புகள், குழு கூட்டம் நடத்தும் முறை, கூட்ட தீர்மான அறிக்கை சமர்பித்தல் மற்றும் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பில் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் சுகாதார செவிலியரின் பங்கு குறித்து பயிற்சி அளித்தார்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர்கள் ஜெயசித்ரா, முத்துமாணிக்கம், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா, ஆற்றுப்படுத்துனர் பரமேஸ்வரி, சமூகப் பணியாளர்கள் பிரியதர்ஷினி, பிரியங்கா ஆகியோர் குழந்தை தத்தெடுத்தல், பிற்காப்புத் திட்டம், வளர்ப்பு திட்டம், நிதி ஆதாரங்கள், போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்புச் சட்டம், குழந்தைகள் உளவியல் ரீதியில் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்தும் பயிற்சி அளித்தனர். புறத்தொடர்பு பணியாளர்கள் கிருத்திகா வரவேற்றார். கீதா நன்றி கூறினார். பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post சுகாதார மேற்பார்வையாளர், கிராம செவிலியர்களுக்கு குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Edamalaipattiputhur ,Dinakaran ,
× RELATED திருச்சி-திண்டுக்கல் சாலையில் போலீஸ் வாகனம்-ஆட்டோ மோதல்