×

காரமடை அருகே பரபரப்பு ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு தலைவர் தர்ணா

*அரசு கோப்புகளை பிடிஓ திருடியதாக புகார்

மேட்டுப்பாளையம் : சிக்கதாசம்பாளையம் ஊராட்சி ேகாப்புகளை மண்டல துணை பிடிஓ திருடியதாக புகார் தெரிவித்து தலைவர் நேற்று அலுவலகத்திற்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஒன்றியத்தில் உள்ள சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு தலைவராக விமலா (அதிமுக), துணைத்தலைவராக வினோத்குமார் (இவர் அதிமுகவில் இருந்து திமுக ஆட்சிக்கு பின் திமுகவில் இணைந்தவர்) ஆகியோர் உள்ளனர்.

ஊராட்சி தலைவர் விமலா மீதான புகாரின்பேரில் இவருக்கு காசோலையில் கையெழுத்திடும் உரிமை ரத்து செய்யப்பட்டு காரமடை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (பிடிஓ) வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஊராட்சியில் அனுமதியின்றி கட்டிடம் கட்டுவதாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைத்தலைவர் வினோத் தலைமையில் 11 கவுன்சிலர்கள் உயரதிகாரிகளிடம் புகார் கூறினர்.

இதையடுத்து அங்கீகரிக்கப்படாத மனைப்பகுதிகளை ஆய்வுசெய்ய மண்டல துணை பிடிஓ நந்தினி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி ஊராட்சி அலுவலகத்திற்கு தனிநபர்களை அழைத்து வந்த மண்டல துணை பிடிஓ நந்தினி, மகளிர்குழு அலுவலக பணியாளர் சுரேகாவிடம் இருந்து 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான அரசு கோப்புகளை ஆட்டோவில் எடுத்து சென்றாராம்.

இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் தங்கராஜிடம் தெரிவித்தனர். இதைக்கண்டித்து ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டுபோட்டு தலைவர் விமலா நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து பிடிஓ ராமமூர்த்தி கூறுகையில்,“கோப்புகளை ஆய்வு செய்ய மண்டல துணை பிடிஓவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், தனி நபர்கள் மூலம் கோப்புகளை எடுத்து செல்ல அனுமதி கிடையாது. ஊராட்சி செயலாளர் தங்கராஜிடம் இருந்தும் புகார் வந்துள்ளது. விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

ஊராட்சி தலைவர் விமலா கூறுகையில்,“ஊராட்சி துணைத்தலைவர் வினோத்குமார் என்மீது பொய்யான குற்றங்களை சுமத்த முயற்சிக்கிறார். என் மீது ஏற்கனவே தவறாக பதிவு செய்த வழக்குகளை அரசு ரத்து செய்ய வேண்டும். ஊராட்சி அலுவலகத்தில் இருந்து மண்டல துணை பிடிஓ எடுத்து சென்ற அரசு கோப்புகளை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்’’ என்றார்.இதுதொடர்பாக மண்டல துணை பிடிஓ நத்தினியிடம் கேட்டபோது, கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதாக கூறினார். பிரச்னை குறித்து பதிலளிக்கவில்லை.

The post காரமடை அருகே பரபரப்பு ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு தலைவர் தர்ணா appeared first on Dinakaran.

Tags : Dharna ,Karamada ,PTO ,Chickadasampalayam ,Zonal Sub-PTO ,Locksmith ,Tarna ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே காரமடை திருமா...