×

சத்தியமங்கலம் வனப்பகுதியில் சாலையோரம் பாலித்தீன் காகிதத்தை ருசிக்கும் காட்டு யானை வீடியோ வைரல்

*இதயத்தை நொறுங்கச் செய்யும் காட்சி

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் வனப்பகுதியில் சாலையோரம் பாலித்தீன் காகிதத்தை காட்டு யானை சாப்பிடும் வீடியோ காட்சி இதயத்தை நொறுங்கச் செய்கிறது. இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியடைய செய்துள்ளது.தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஏற்காடு, ஊட்டி போன்ற மலை வாசஸ்தலங்களில் சீசன் நேரங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இவர்கள் வாகனங்களில் பயணிக்கும்போது சாலையோரம் பாலித்தீன் கவர்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசிச்செல்கின்றனர். இதனால் பாலித்தீன் கவர்களை உண்டும், கண்ணாடி பாட்டில்கள் பாதத்தில் குத்தியும் வன விலங்குகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் காட்டில் இருந்து வெளியேறிய யானை, சாலையோரத்தில் உள்ள பாலித்தீன் காகிதத்தை, அதன் விபரீதம் அறியாமல் உண்டு ருசிக்கும் காட்சி வெளியாகி இதயத்தை நொறுங்கச் செய்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சாலையோரமாக நடந்து சென்றுள்ளது. இதை அவ்வழியே காரில் சென்றவர்கள் வீடியோ எடுத்தனர். வேகமாக நடந்த சென்ற காட்டு யானை சாலையோர வனப்பகுதியில் கிடந்த பாலித்தீன் காகிதத்தை தும்பிக்கையால் எடுத்து சாப்பிடுவதும், காரில் சென்றவர்கள் காட்டு யானையை பிளாஸ்டிக் காகிதத்தை சாப்பிட வேண்டாம் என சத்தம் போடுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

தற்போது இந்த வீடியோ காட்சி வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சாலையோர வனப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலித்தீன் காகிதங்களை வீசுபவர்களை வனத்துறையினர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளதால் காட்டு யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் பாலித்தீன் காகிதங்களை தின்று உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post சத்தியமங்கலம் வனப்பகுதியில் சாலையோரம் பாலித்தீன் காகிதத்தை ருசிக்கும் காட்டு யானை வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam forest ,Sathyamangalam ,Sathamangalam forest ,
× RELATED தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க...