×

மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்.. உள்நாட்டு விஷயங்களில் தலையிட வேண்டாம் என ஒன்றிய அரசு கண்டனம்!!

லண்டன் : பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் நேரத்தில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரான்சில் ட்ராஸ்பேர்க் நகரில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மணிப்பூரின் தற்போதைய நிலை என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. அப்போது மணிப்பூரில் நடைபெறும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீறல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதையடுத்து கலவரம் மற்றும் உயிர் சேதங்களை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் பாஜக முன்னணி உறுப்பினர்களால் பயன்படுத்தப்படும் தேசியவாத சொல்லாட்சிகள் வண்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிடப்பட்டு இருந்தது.

கலவரத்தில் சிறுபான்மையினர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாகவும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட கடினமான சவால்களை கடந்து வரவேண்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு விஷயத்தில் தலையிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும் இது காலனி ஆதிக்கம் மன நிலையை பிரதிபலிக்கிறது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக நீதித்துறை உட்பட பல துறைகள் கண்காணித்து நிலைமையை கட்டுக்குள் வைத்து இருப்பதாகவும் இதில் தலையிடுவதற்கு பதிலாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தங்கள் சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்தலாம் என்றும் ஒன்றிய அரசு கண்டித்துள்ளது.

The post மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம்.. உள்நாட்டு விஷயங்களில் தலையிட வேண்டாம் என ஒன்றிய அரசு கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : European Parliament ,Riot ,Union Government ,London ,Modi ,France ,Manipur ,Manipur Riot ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...