×

மேலூரில் விமரிசையாக நடந்தது காளியம்மன் கோயில் 80ம் ஆண்டு திருவிழா

மேலூர், ஜூலை 14: மேலூர் செக்கடியில் உள்ள காளியம்மன் கோயிலின் 80ம் ஆண்டு ஆனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலூர் நகரில் உள்ள செக்கடி காத்தாபிள்ளை தெருவில் உள்ள காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 80ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, முன்னதாக பக்தர்கள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் மண்கட்டி தெப்பகுளத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

தொடர்ந்து மாலையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். இதைத்தொடர்ந்து, மேலூர் நகர் அனைத்து கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் புஷ்பரத ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை காளியம்மன் கோயில் விழா கமிட்டியினர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

The post மேலூரில் விமரிசையாக நடந்தது காளியம்மன் கோயில் 80ம் ஆண்டு திருவிழா appeared first on Dinakaran.

Tags : year festival ,Kaliyamman Temple ,Mellur ,Melur ,year Ani festival ,Melur Chekkadi ,Kaliyamman ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு