×

ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மப்பேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மப்பேடு சப் – இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் நரசிங்கபுரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நேற்று முன்தினம் அந்த பகுதியில் இரண்டு பேர் நடந்து சென்றனர். அவர்களை மடக்கி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் மகன் வினோத்குமார் (21) மற்றும் இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பாரத் மகன் முகேஷ் (19) என தெரிய வந்தது.இவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து மப்பேடு, நரசிங்கபுரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சாவை விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. இவர்களில் வினோத் குமார் மீது மப்பேடு, சுங்குவார்சத்திரம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

The post ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Thiruvallur ,Thiruvallur District ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே...