×

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு இதுவரை 2 டிஎம்சி கிடைத்துள்ளது: அதிகாரிகள் தகவல்

ஊத்துக்கோட்டை: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா – தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சியும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும். கண்டலேறு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம்.

இந்நிலையில் தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்ததால், ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கடந்த மே 1ம் தேதி அன்று கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு முதலில் 500 கன அடியும், பின்னர் படிப்படியாக உயர்த்தி 2 ஆயிரம் கன அடியாகவும், பின்னர் 2,450 கன அடியாகவும் திறக்கப்பட்டு, பின்னர் 1,700 கன அடியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை – தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டிற்கு கடந்த மே மாதம் 3ம் தேதி வந்தடைந்தது.

மே மாதம் 12ம் தேதி தமிழக எல்லையான ஜீரோ பாயின்டில் 375 கன அடி தண்ணீர் வந்தது. ஆந்திர அதிகாரிகள் ஜூன் மாதம் விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட தண்ணீரை கூடுதலாக ஒரு பகுதி தமிழகத்திற்கு திருப்பி விட்டனர். இதனால் தற்போது ஜீரோ பாயின்டில் 352 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த மே 1ம் தேதி முதல் நேற்று வரை தமிழகத்திற்கு 2 டிஎம்சி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு இதுவரை 2 டிஎம்சி கிடைத்துள்ளது: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kandaleru Dam ,Oothukottai ,Chennai ,Tamil ,Andhra government ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து