×

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து போன் பேசியதால் டிரான்ஸ்போர்ட் உரிமையாளரை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி: பால் வியாபாரி கைது

பூந்தமல்லி: திருவேற்காட்டில், டிரான்ஸ்போர்ட் உரிமையாளரை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்ற பால் வியாபாரி கைது செய்யப்பட்டார். திருவேற்காடு காடுவெட்டி ஆவடி சாலை பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (42). இவர், மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். திருவேற்காடு ராமலிங்கம் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (46). இவரது மனைவி சசிகலா. தேவேந்திரன், நந்தகோபாலுக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து கடந்த 9 ஆண்டுகளாக 16 லாரிகள் வைத்து டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தேவேந்திரன் தனது அலுவலக வாசலில் பைக் மீது அமர்ந்து கொண்டு, செல்போனில் பேசியுள்ளார். அப்போது அங்கு போதையில் வந்த நந்தகோபால், ‘‘நான் வரும்போது மரியாதை கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு செல்போன் பேசுகிறாயே’’ என கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நந்தகோபால், கீழே கிடந்த கல்லை எடுத்து தேவேந்திரன் தலையில் பலமுறை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதில், பலத்த காயமடைந்த தேவேந்திரன் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் தேவேந்திரனை மீட்டு பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தேவேந்திரன் மனைவி சசிகலா திருவேற்காடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து நந்தகோபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து போன் பேசியதால் டிரான்ஸ்போர்ட் உரிமையாளரை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி: பால் வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Thiruvekkat ,Thiruvekadu Kaduvetti… ,Dinakaran ,
× RELATED பஞ்சு மெத்தை குடோனில் தீ விபத்து