×

வேதாரண்யம் கடலில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் புனித நீராட வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

 

வேதாரண்யம்,ஜூலை 14: வேதாரண்யம் கடலில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் புனித நீராட வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆடி அமாவாசைக்கு வேதாரண்யம் கடலில் புனித நீராட வரும் பக்தர்களின் வசதிக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆர்டிஓ மதியழகன் தலைமையில் நடந்தது. தாசில்தார் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகின்ற 17ம்தேதி அன்று அடி அமாவாசைக்கு வேதாரண்யம் பகுதியில் உள்ள சன்னதி கடல், கோடியக்கரை ஆதிசேதுகடல், வேதாமிர்த ஏரி, வேதாரண்யம் கோயிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தம் போன்றவைகளுக்கு புனித நீராட வரும் பக்தர்களுக்கு தேவையான பஸ் வசதி, மருத்துவ முகாம், சாலை போக்குவரத்து, சுகாதாரப் பணிகள், குடிநீர் வசதி மற்றும் பல்வேறு வசதிகள் செய்து தருவது குறித்து ஆலோசிக்கபட்டது. பின்பு வேதாரண்யம் சன்னதி கடலில் பக்தர்கள் கடலில் இறங்கி குளிக்க முடியாத அளவிற்கு கடந்த ஒரு வருட காலமாக சேறு தள்ளி இருப்பதால் பக்தர்கள் புனித நீராட முடியாமலும் மூதாதையர்களுக்கு திதி கொடுக்க முடியாமலும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

தை அமாவாசைக்கு நகராட்சி மூலம் பொக்லேன் இயந்திரம் வைத்து கடலில் குழி வெட்டி அதில் பக்தர்கள் குளித்து சென்றனர். இதே போல் இந்த முறையும் நகராட்சி மூலம் பிரத்தியோக முறையில் கடலில் சேற்றை சிறிது தூரம் அகற்றி குழி வெட்டி பக்தர்களை புனித நீராட செய்வது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான தனித்தனி வழிகள் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் பசுபதி, கடலோர பாதுகாப்பு குழு எஸ்ஐ பன்னீர்செல்வம், கோயில் செயல் அலுவலர் அறிவழகன், தனியார் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். ஆர்டிஓ உதவி தாசில்தார் முருகு நன்றி கூறினார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தாசில்தார் ஜெயசீலன், நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகம்மது இப்ரஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வேதாரண்யம் கடற்கரைக்கு சென்று புனித நீராட வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

The post வேதாரண்யம் கடலில் ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்கள் புனித நீராட வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Amavasya ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...