×

நள்ளிரவு திடீர் மழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்: விமான சேவை பாதிப்பு

சென்னை: ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகரில் இருந்து 342 பயணிகளுடன் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அப்போது பலத்த சூறைக்காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால், விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் தத்தளித்தது. இதையடுத்து சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை பெங்களூருக்கு திருப்பி அனுப்பினார்கள். அதேபோல், பாரீசில் இருந்து 286 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் பிரான்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து 269 பயணிகளுடன் சென்னை வந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மற்றும் திருச்சி, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ஆகிய 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து கொண்டிருந்தன.

சிறிது நேரத்தில் மழை ஓய்ந்ததும், வானில் தத்தளித்த 4 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின. அததோடு பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், நேற்று அதிகாலை 2.50 மணிக்கு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. இதேபோல், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய கோலாலம்பூர், பாங்க்காக், ஹாங்காங், சிங்கப்பூர், பாரீஸ், பிராங்க்பார்ட், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவிருந்த 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. திடீர் மழையால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

The post நள்ளிரவு திடீர் மழை காரணமாக தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்: விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai International Airport ,Germany ,Frankfurt ,
× RELATED போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார்...