×

ரூ.77.14 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்

வாலாஜாபாத்: கட்டவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 82 பயனாளிகளுக்கு ரூ.77.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் கட்டவாக்கம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இம்முகாமில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழில்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, சமூகநலன் மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் விவரங்கள் குறித்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள், பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

இந்த கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தகுதி வாய்ந்த 82 பயனாளிகளுக்கு ரூ.77.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இங்கு அமைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த அரங்குகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், திட்டங்களின் விவரங்கள் பற்றிய சந்தேகம் ஏதேனும் இருப்பின் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்து, தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ளலாம்.

மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு 30.6.2023 முதல் 10.7.2023 வரை பொதுமக்களிடமிருந்து, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுதிறனாளி உதவித்தொகை, ஊனமுற்றோர் நான்கு சக்கர வாகனம், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் உரிய முறையில் தீர்வு காணப்பட்டதில், 82 தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.77 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில், பெறப்பட்ட மனுக்களில், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் 5 நபர்களுக்கும், பெட்ரோல் ஸ்கூட்டர் 1 நபருக்கும், வருவாய்த்துறை மூலம் அடிப்படை தேவைகளான முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் 10 நபர்களுக்கும், இலவச வீட்டுமனைப் பட்டா 29 நபர்களுக்கும், முழுபுலம் பட்டா 1 நபர்களுக்கும், குடும்ப அட்டை நகல் 10 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் மகளிர் சுயஉதவி வங்கிக்கடன் 5 நபர்களுக்கும்,

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் சலவைப் பெட்டி 4 நபர்களுக்கும், தொழில்துறை மூலம் தொழில் கடன் 3 நபர்களுக்கும், வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் வேளாண் இடுபொருட்கள் 5 நபர்களுக்கும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் பவர் டில்லர் இயந்திரம் மானியம் 1 நபருக்கும், தோட்டக்கலைத்துறை மூலம் நாற்றுகள், விதைகள் 3 நபர்களுக்கும், கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுய உதவிக்குழு கடன் 5 நபர்களுக்கும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடர்ந்து நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கிற்கு சென்று பார்வையிட்டு திட்டங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாவட்ட கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன்,

வாலாஜாபாத் ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், வாலாஜாபாத் வட்டாட்சியர் சுபப்பிரியா, கட்டவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் அஞ்சலம் அருள், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய் காந்தி, வாலாஜாபாத் பேரூர் திமுக செயலாளர் பாண்டியன் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, முகம் நடைபெற்ற அனைத்து துறை கண்காட்சியை கலெக்டர் கலைச்செல்வி மோகன், செல்வம் எம்பி, சுந்தர் எம்எல்ஏ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மக்களின் பணியை எவ்வாறு செய்துள்ளனர் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரியிடம் கேட்டறிந்தனர்.

The post ரூ.77.14 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Kalachelvi Mohan ,Wallajahabad ,Katavakkam ,
× RELATED 10ம் வகுப்பு தேர்ச்சியான மாணவர்கள்...