×

பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்

கரூர், ஜூலை 14: பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுறுத்தி உள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்ததாவது:- இக்கூட்டத்தில் பள்ளி அளவிலான முதல் மட்டக்குழு சிறப்பாக பணி மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு போதுமான அளவுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் முதன்மை கல்வி அலுவலர்கள் மேலாய்வு மேற்கொள்ள வேண்டும். வாரந்தோறும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்க வேண்டும். பள்ளப்பட்டியில் மதர்ஷா தலைமையில் கூட்டம் ஏற்பாடு செய்து மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேட்டைக்காரன் புதூர், நீலிமேடு, ஜெகதாபி கிராமம், வடக்கு மேட்டுப்பட்டி, வெங்கக்கல்பட்டி, தேசியமங்கலம், தெலுங்காப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் மணியடிச்சாச்சு என்ற திட்டத்தின் வாயிலாக பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 10 மற்றும் 12ம் வகுப்புகளில் 2022-2023ம் பொதுத்தேர்வுகள் எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தற்போது துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்களை அவர்களுக்கு விருப்பமான வேறு தொழிற்கல்வி பயிற்சிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

15 நாட்களுக்கு மேல் வருகை தராத இடைநீற்றல் ஆக வாய்ப்புள்ள குழந்தைகளை இடைநீற்றலின்றி மீண்டும் பள்ளிக்கு வருகை புரிவதை வட்டார மற்றும் பள்ளி அளவிலான மூன்றடுக்கு குழு உறுப்பினர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு வழிகாட்டுதல் ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீதும், அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தால் 8903331098 அல்லது 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, குளோபல் சமூக நலப்பாதுகாப்பு இயக்க சொக்கலிங்கம், கிராமியம் தொண்டு நிறுவன இயக்குனர் நாராயணன், உதவி திட்ட அலுவலர் சக்திவேல் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 17 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பள்ளி செல்லா குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karur District Collector ,Karur ,School Sella ,
× RELATED கரூர் புதுத்தெரு வழியாக செல்லும் வாகனங்களை முறைப்படுத்த நடவடிக்கை தேவை