![]()
சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநகர் போக்குவரத்துக் கழக அடையாறு பணிமனையில் நேற்று கனரக வாகனம் ஓட்டுநர் பயிற்சி சிமுலேட்டர் துவக்க விழா, மூச்சு பகுப்பாய்வி வழங்குதல், குளிரூட்டப்பட்ட பணியாளர் ஓய்வு அறை திறப்பு விழா, சிறப்பு இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். 2023-2024ம் ஆண்டு போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அடையாறு பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் வசதிக்காக, ரூ.5 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளிர்சாதன ஓய்வு அறையினை, இன்று திறந்து வைத்தார். மேலும் விபத்துக்களை தவிர்த்திடும் பொருட்டு பணிமனைகளில் பேருந்துகளை இயக்க வரும் ஓட்டுநர்களிடம் மூச்சு பகுப்பாய்வி வாயிலாக பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து பணிமனைகளுக்கும் ரூ.15.05 லட்ச மதிப்பீட்டில் 29 மூச்சு பகுப்பாய்விகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இலகுரக வாகனம் ஒட்டுநர் பயிற்சி மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் பயிற்சி சிமுலேட்டர் வாயிலாக ஓட்டுநர்கள் பயிற்சி எடுக்கும் போது சாலையில் பேருந்துகள் இயக்கும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்த்திட இயலும் என்பதால், ரூ.28.92 லட்ச மதிப்பீட்டில் 3 கனரக வாகனம் ஓட்டுநர் பயிற்சி சிமுலேட்டர் மற்றும் ரூ.8.06 லட்ச மதிப்பீட்டில் போலீரோ கார் ஒன்றையும் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். மேலும், அனைத்து பணியாளர்களின் உடல் நலம் பேணிடும் வகையில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில், வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம், இணை மேலாண் இயக்குநர் குணசேகரன், பொது மேலாளர்கள், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post அடையாறு பணிமனையில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி சிமுலேட்டர்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
