×

இந்தியாவின் ஒற்றுமை, முன்னேற்றத்துக்கு ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும்: இந்திய சட்ட ஆணைய தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒற்றுமை, முன்னேற்றத்திற்கும் ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் ரிதுராஜ் அவஸ்திக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பன்முகச் சமூகக் கட்டமைப்பிற்குப் பெயர் பெற்ற இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்திட இக்கடிதத்தினை எழுதுகிறேன். சில சீர்திருத்தங்களின் அவசியத்தைப் தாம் உணரும் அதேவேளையில், பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன்வைக்கிறது. நமது சமூகத்தின் பல்வேறுபட்ட சமூகக் கட்டமைப்பிற்கு சவால் விடுப்பதாகவும் உள்ளது. பொது சிவில் சட்டத்தினை அமல்படுத்துவதை தமிழ்நாடு அரசு உறுதியாக எதிர்ப்பதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்: மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 25-ன்படி, \\\\”ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும், கடைப்பிடிப்பதற்கும், பரப்புவதற்குமான உரிமையை\\\\” உறுதி செய்துள்ளது. அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன. அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது.

ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம் மற்றும் வட்டாரத்திற்கு வட்டாரம் வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை. இதன் காரணமாகவும், மேலும் பல காரணிகளுடன், அரசியலமைப்பின் 44வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படுகிறது. தனது, 31.8.2018 நாளிட்ட அறிக்கையினை விவாதிப்பதற்காக சமீபத்தில் கூடிய இந்தியாவின் 21வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளதை நினைவுகூருகிறேன். அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்பு சட்டநெறிமுறைகளுக்கு முரணாக அமைவதோடு மட்டுமல்லாமல், நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும். தனிநபர் சட்டங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாசார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுகிறேன்.
சமூக ஒருங்கிணைப்பு: பொது சிவில் சட்டம், பல்வேறு மத சமூகங்களிடையே ஆழமான பிளவுகளையும் சமூக அமைதியின்மையையும் உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. பலவகையான மத, பண்பாட்டு, மொழி வேறுபாடுகள் உள்ள நமது நாட்டில், மத நல்லிணக்கம் என்பது மிகவும் முக்கியமானது. முரண்பாடுகளை உருவாக்கி பகைமையை வளர்க்கக்கூடிய ஒரே வகையான சிவில் சட்டத்தை திணிப்பதைவிட, மக்களிடையே பரஸ்பர புரிதலையும், மரியாதையையும் மேம்படுத்துவது முக்கியம்.

சிறுபான்மையினர் உரிமைகள்: அரசியலமைப்பின் 29வது பிரிவின்மூலம், சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்துப் பாதுகாக்கும் மதச்சார்பற்ற நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்கிறேன். அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை, மாநிலங்களின் பழங்குடிப் பகுதிகள், மாவட்ட மற்றும் வட்டாரக் கவுன்சில்கள் மூலம் தங்கள் பழக்கவழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். பொது சிவில் சட்டம் இயல்பிலேயே, அத்தகைய பழங்குடி சமூகங்களை அதிக அளவில் பாதிக்கும் மற்றும் அவர்களின் பாரம்பரிய நடைமுறைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அடையாளங்களைப் பின்பற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும், அவர்களின் உரிமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆற்றலை உள்ளடக்கியதாக பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது. இணக்கமான வாழ்வுக்கு முன்னுரிமை: எல்லாவற்றிற்கும் மேலாக, நமது மகத்தான தேசத்தின் கட்டமைப்பை உருவாக்கும் பல்வேறு சமூகங்களிடையே இணக்கமான வாழ்வை வளர்ப்பதே நமது முதன்மை குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒரே மாதிரியான சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, மதங்களுக்கிடையிலான உரையாடல்களை வலுப்படுத்துவதிலும், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதிலும், இந்தியாவை வரையறுக்கும் வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துவோம்.

தற்போதைய நிலையில், மாநில அரசுகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இச்சட்டம் தொடர்பான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு முக்கியமானது. மேற்காணும் கருத்துகளைத் தீவிரமாகப் பரிசீலித்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். சட்டங்களில், ஒரேமாதிரியான தன்மையை கொண்டுவர முயற்சிப்பதைவிட, அனைத்து மக்களுக்கும் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளில் ஒரேமாதிரியான சூழ்நிலையை ஏற்படுத்துவதை நமது நோக்கமாகக் கொள்ள வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் தன்மை வழிவகுக்காது என்ற அடிப்படைக் கோட்பாட்டை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நமது நாட்டின் பலம், அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. பொது சிவில் சட்டத்தின் மூலம் அதை ஒருமுகப்படுத்த முயற்சிப்பதை விட, நாம் நமது பன்முகத்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டாட வேண்டும்.

The post இந்தியாவின் ஒற்றுமை, முன்னேற்றத்துக்கு ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும்: இந்திய சட்ட ஆணைய தலைவர் ரிதுராஜ் அவஸ்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : India ,Chief Minister ,M.K.Stal ,Law Commission of India ,Rituraj Awasthi ,CHENNAI ,
× RELATED தமிழையும், தமிழரையும் உண்மையாக...