×

மயான கூடம் கட்ட வருவாய்த்துறை எதிர்ப்பு விகேபுரம் அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

விகேபுரம், ஜூலை 14:விகேபுரம் அருகே செட்டிமேட்டில் மயான நன்மை கூடம் கட்டுவதற்கு வருவாய்த்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விகேபுரம் அருகேயுள்ள மணிமுத்தாறு பேரூராட்சியைச் சேர்ந்தது செட்டிமேடு கிராமம். இக்கிராமத்தினர் மற்றும் அருகிலுள்ள மேலஏர்மாள்புரத்தைச் சேர்ந்த ஒரு சமுதாயத்தினர் செட்டிமேட்டில் உள்ள ஒரு இடத்தை பல காலமாக இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் நன்மைக்கூடம் கட்ட வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று இசக்கி சுப்பையா எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நன்மைக்கூடமும், மணிமுத்தாறு டவுன் பஞ்சாயத்திலிருந்து சின்டெக்ஸ் தொட்டி அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரும்பாலான வேலைகள் நடந்து முடிந்துவிட்டது.

இதற்கிடையில் அம்பை வருவாய்த்துறையினர் சிலர் சம்பவ இடத்திற்கு சென்று இது அரசு புறம்போக்கு நிலம். இதனால் அங்கு நடைபெறும் வேலைகளை நிறுத்த கூறியதாக தெரிகிறது. மேலும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடமிருந்து முறையான அனுமதி பெற்ற பின்பு பணி செய்யுவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மணிமுத்தாறு பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சிவா, மணிமுத்தாறு நகர அதிமுக செயலாளர் ராமையா மற்றும் அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வந்து நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விகேபுரம் போலீசார் சென்று அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்து கலைந்து சென்றனர்.

The post மயான கூடம் கட்ட வருவாய்த்துறை எதிர்ப்பு விகேபுரம் அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Vikepuram ,Chettimat ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி