×

ஒற்றுமை விருந்து

ஒன்றிய பாஜ அரசின் அராஜகப்போக்கை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதன்படி அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜவை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிகளின் முதல் ஒற்றுமை கூட்டம் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. இதில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 15 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஒன்றிய பாஜ அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதே இந்த ஒற்றுமை கூட்டத்தின் முக்கிய நோக்கமாக விவாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் ஒற்றுமை கூட்டம் வரும் 17, 18 தேதிகளில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பங்கேற்கிறார். அதற்காக 17ம் தேதி இரவு பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார். பின்னர் 18ம் தேதி அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்துகின்றனர். இதற்காக 24 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியா அழைப்பு விடுத்துள்ளார்.

ஒன்றிய பாஜ அரசு அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தி முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரங்களை வழங்கி, பாஜ ஆட்சி அல்லாத மாநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வருமானவரி சோதனை, கைது நடவடிக்கை, விசாரணை என்று அச்சுறுத்தலை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை குறி வைத்து ஒடுக்கும் முயற்சியில் பாஜ பகிரங்கமாகவே களமிறங்கியுள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களுக்கு அடிபணியாத வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி நாட்டின் ஜனநாயக மரபுகளை குழிதோண்டி புதைக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஒன்றிய பாஜவுக்கு எதிராகவும், நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர், கூட்டணியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி செல்ல செயற்குழுக்கள் அமைப்பது, ஒற்றுமை பேரணி, மாநிலங்களில் போராட்ட இயக்கம் அமைத்தல் ஆகியன குறித்து தீர்மானித்து முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் எந்த மனக்கசப்புக்கும், கருத்து வேறுபாடுக்கும் இடம்கொடுக்காமல் ஒன்றிய பாஜ அரசை அகற்றுவது ஒன்றே லட்சியமாக செயல்பட வேண்டும். முதல் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் மீது அதிருப்தி வெளிப்படுத்தினார். எனவே அவரது ஆம்ஆத்மி கட்சி பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்படியோ எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளதால் பாஜவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை விருந்தால் பாஜவின் தூக்கம் தொலைவது உறுதி என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

The post ஒற்றுமை விருந்து appeared first on Dinakaran.

Tags : Unity Feast ,Dishagaga ,Congress ,Union Baja government ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...