×

அதிமுக ஆட்சியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் மாஜி டிஆர்பி தலைவர் இன்று ஆஜராகாவிட்டால்… ஐகோர்ட் கிளை எச்சரிக்கை

மதுரை: அதிமுக ஆட்சியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரத்தில், மாஜி டிஆர்பி தலைவர் இன்று பகல் 1 மணிக்குள் ஆஜராகாவிட்டால், பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்படுவார் என ஐகோர்ட் கிளை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தின் சார்பில் 387 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (வேதியியல்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு (அதிமுக ஆட்சியில்) 2017ல் வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வில் தவறான வினா-விடை இடம் பெற்றதாக சிலர், 2017ல் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தவறாக கேட்கப்பட்ட வினா எண் 14, 43, 63 மற்றும் 72 ஆகியவற்றிற்கு தலா ஒரு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து, டிஆர்பி தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இதில், தேர்வெழுதியவர்களின் கோரிக்கையை பரிசீலித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அனுமதித்து பணி வழங்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே, இதே விவகாரத்தில் தாரணி என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால், தாரணி தரப்பில் சீராய்வு மனு செய்யப்பட்டிருந்தது.

இதை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான முந்தைய உத்தரவு மனுதாரருக்கும் பொருந்தும் என உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை ஏற்று தனக்கு இன்னும் பணி வழங்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாரணி மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், அப்போதைய ஆசிரியர் தேர்வாணைய தலைவர் மற்றும் பள்ளிகல்வித்துறை செயலர் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி, அப்போதைய டிஆர்பி தலைவர் லதா மற்றும் பள்ளி கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் துணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.விஜயகுமார் ஆகியோர், ‘‘இருவரும் தற்போது வெவ்வேறு துறைகளில் இருப்பதால் தங்களுக்கு ஆஜராவதில் விலக்களிக்க வேண்டுமென கூறியுள்ளனர். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. சம்பந்தப்பட்டவருக்கு பணி வழங்கப்பட்டது என்றாலும், அதற்கான ஆவணங்களை பார்க்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. நீதிமன்ற உத்தரவு ஏன் தாமதமாக நிறைவேற்றப்பட்டது என்பதற்கான காரணத்தை அவர்கள் கூறவில்லை. ஆஜராக வேண்டியதற்கு ஒரு சில நாள் முன்னதாக விலக்களிக்க கோரி மனு செய்ததில் இருந்தே இந்த விவகாரத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது தெரிகிறது. எனவே, இருவரும் 14ம் தேதி (இன்று) பகல் ஒரு மணிக்கு ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்படுவர்’’ என உத்தரவிட்டுள்ளனர்.

The post அதிமுக ஆட்சியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் மாஜி டிஆர்பி தலைவர் இன்று ஆஜராகாவிட்டால்… ஐகோர்ட் கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Maji ,President ,Trp ,iCort ,Madurai ,DrP ,iCourt Branch ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!