×

பிளஸ்2 முடித்துள்ள மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சலிங் 22, 28ம் தேதி நடக்கிறது: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை: பிஇ, பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 22ம் தேதி துவங்குகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார். தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான கவுன்சலிங்கின் அட்டவணையை சென்னையில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது: தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் 4 கட்டமாக நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. 430 கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 57 ஆயிரத்து 375 இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டைவிட 3,100 இடங்கள் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ் 11 ஆயிரத்து 804 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 736 இடங்கள் கூடுதலாகி உள்ளது. மருத்துவ கவுன்சலிங் முடிந்த பிறகு இன்ஜினியரிங் கவுன்சலிங் தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. தொழில் பாடப் பிரிவினருக்கான இடங்கள் 3,143 உள்ளன. இது கடந்த ஆண்டைவிட 61 இடங்கள் கூடுதல். இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ், இரண்டு புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. பிஇ, பிடெக் படிப்புக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 87 ஆயிரத்து 847 பேர் பதிவுக் கட்டணம் செலுத்தியதால் அவர்களுக்கு சான்று சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 375 இடங்களை ஒதுக்கீடு செய்து உத்தரவுகள் வழங்கப்படும். மருத்துவ கல்லூரிகளில் சேர முடியாதவர்கள் திரும்ப வந்தாலும் அவர்களுக்கு மீண்டும் ஒரு துணைக் கவுன்சலிங் செப்டம்பர் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்படும். மேலும், எஸ்சிஏ பிரிவினருக்கான இடங்களில் காலியிடம் ஏற்பட்டால் அதை எஸ்சி பிரிவினருக்கு வழங்குவதற்கான கவுன்சலிங் இணையதளம் மூலம் செப்டம்பர் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்தப்படும்.

* யாருக்கு எப்போது கவுன்சலிங்
அரசுப்பள்ளிகளில் படித்து சிறப்பு ஒதுக்கீடான 7.5%ல் வரும் பிரிவு மாணவர்கள், மாற்றுத் திறனாளி மாணவர்கள், முன்னாள் படைவீரர், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் இம்மாதம் 22ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடக்கும். பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கவுன்சலிங் இம்மாதம் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 9ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடக்கும். 3ம் கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் 3ம் தேதி வரை நடக்கும்.

The post பிளஸ்2 முடித்துள்ள மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சலிங் 22, 28ம் தேதி நடக்கிறது: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ponmudi ,Chennai ,
× RELATED செய்தித்தாள்கள் வாசிப்பதை...