×

பள்ளிக்கு சென்ற சிறப்பு குழந்தைக்கு சித்ரவதை பள்ளி நிர்வாகியான பாஜ பிரமுகருக்கு ஜாமீன் மறுப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிறப்பு குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய பள்ளி நிர்வாகியான பாஜவை சேர்ந்தவரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (33). இவருக்கு ஏழு வயதில் மகன் உள்ளார். சிறப்பு குழந்தையான அவரை, வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள ‘மை பாட்டி வீடு’ என்ற தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். இந்த நிலையில், ‘தன் மகனை கை, கால்களை கட்டி சித்ரவதை செய்ததாக, வில்லிவாக்கம் போலீசில் தாய் சரண்யா புகார் அளித்தார்.

அதன்படி, பள்ளி உரிமையாளரும், பா.ஜ., நிர்வாகியான வழக்கறிஞர் மீனாட்சி (42) என்பவரை, ஜூன் 21ல் போலீசார் கைது செய்தனர். அவர் மீது குழந்தையை கொடுமை படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஜாமீன் கேட்டு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மீனாட்சி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் தரப்பில், மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, புகார்தாரரின் மகன் சிறப்பு குழந்தை என்பதால் மனுதாரர் பள்ளியில் ஏழாயிரம் ரூபாய் கட்டணத்தில் சேர்த்துள்ளார். அங்கு, ‘இன்டர்ன்ஷிப்’ வந்த மாணவர்கள் அளித்த தகவல்படி, சி.சி.டி.வி., காட்சிகள் ஆய்வு செய்ததில் சிறுவனை கொடூரமாக அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.

இது குறித்து சிறுவனின் தாய் பள்ளி நிர்வாகத்தை கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். குழந்தை தரப்பில் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவன் ஒரு சிறப்பு குழந்தை என்பது தெரியாது எனக்கூறும் வாதத்தை ஏற்க முடியாது. சி.சி.டி.வி., காட்சிகளை பார்வையிட்டதில் அதில் இடம்பெற்ற காட்சிகள் மனிதாபிமானற்ற முறையில் சிறுவனிடம் மனுதாரர் நடந்திருப்பது தெரிகிறது. எனவே, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post பள்ளிக்கு சென்ற சிறப்பு குழந்தைக்கு சித்ரவதை பள்ளி நிர்வாகியான பாஜ பிரமுகருக்கு ஜாமீன் மறுப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras Principal Sessions Court ,Chennai ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...