×

மதுரை வீரன் புத்தக விவகார வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: தலைமை நீதிபதிக்கு தனி நீதிபதி பரிந்துரை

சென்னை: மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைப்பதற்கு தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகம், ஆட்சேபணைக்குரிய, சாதியவாதத்திற்கு காரணமாக உள்ளது என்று கூறி தடை விதித்து கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

மேலும், அந்த புத்தகங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த தடையை எதிர்த்து புத்தகத்தை எழுதிய குழந்தை ராயப்பன் கடந்த 2017ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தில் மதுரை வீரனின் வீரத்தை குறிப்பிட்டு எழுதியுள்ளேன். சாதி ரீதியாக எதுவும் இல்லை. எனவே, இந்த புத்தகத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புத்தகத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அது பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசுக்கு அதிகாரம் உள்ளது. குற்ற விசாரணை முறைச் சட்டம் 96வது பிரிவின்படி புத்தகங்களை பறிமுதல் செய்ததை எதிர்த்த வழக்குகளை மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகள் தான் விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டார். அரசுத்தரப்பில் முன் வைக்கப்பட்ட இந்த ஆட்சேபத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் அமர்வை ஏற்படுத்துவதற்காக வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

The post மதுரை வீரன் புத்தக விவகார வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்: தலைமை நீதிபதிக்கு தனி நீதிபதி பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madurai Veeran ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...