×

சிங்காதனம் வரைந்த புராணம்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பூங்கோயில் என்னும் புற்றிடங்கொண்டார் திகழும் திருமூலட்டானம், ஆரூர் அரநெறி என்னும் திருக்கோயில் ஆகிய இரு தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்கள் ஒரே வளாகத்தினுள் விளங்கும் சிறப்பு ஆரூர் தியாகேசர் திருக்கோயிலுக்குரியதாகும். இவ்விரு கோயில்களுக்கு எவ்வளவு முக்கியத்துவமோ அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இதே திருக்கோயில் வளாகத்துள் திகழும் தேவாசிரியன் என்னும் திருமண்டபமாகும். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், ஆரூர் கோயிலுக்கு வந்தபோது, முதலில் வீழ்ந்து வணங்கிய இடம் தேவாசிரியனே ஆகும். சுந்தரரோ அடியார் தம் பெருமையைத் திருத்தொண்டத் தொகை என்னும் பதிகமாகப் பாடிய இடமும் இதுவேயாகும்.

இத்தகு சிறப்புகள் பெற்ற தேவாசிரிய மண்டபத்தின் விதானத்திலும், சுவரிலும் கி.பி. 1700-ல் அற்புதமான ஓவியங்களைத் தீட்டி தலைசிறந்த ஓவியக் கூடமாக அதனை மாற்றிய பெருமை திருவாரூர் ஓவியன் சிங்காதனம் என்னும் கலைஞனுக்கே உரியதாகும்.பதினெட்டாம் நூற்றாண்டில் தஞ்சையை சகஜியும், பின்னர் முதல் சரபோஜியும் ஆட்சி புரிந்தபோது, திருவாரூரில் அம்மன்னனின் பிரதிநிதியாய் சாமந்தனார் (படைத்தலைவர்) ஒருவர் அரசு அலுவல்களை மேற்கொண்டு வந்தார். அவர்தம் பிரதானியாய்ப் பணிபுரிந்தவரே சிங்காதனமாவார். ராயசாமந்தனாரின் பிரதானியாய் அரசு அலுவல்களைப் பார்த்ததோடு ஓவியத் தொழிலிலும் தலைசிறந்து விளங்கினார்.

அதனால்தான், அரசு ஆதரவோடு தேவாசிரிய மண்டபத்தில் தம் ஓவியப் படைப்புகளை இடம்பெறச் செய்துள்ளார். முசுகுந்த புராணம், மனுநீதிச் சோழன் புராணம் ஆகிய இரண்டு புராணங்களும் முழுமையான காட்சி விளக்கங்களோடு விதானத்திலும் (மண்டபத்தின் உட்கூரை) சுவரிலும் அவர்தம் தூரிகையால் வடிவம் பெற்றன. கட்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணத்தில் கந்தவிரதப் படலம் என்ற பகுதியுள்ளது.

அதில், முசுகுந்த சக்கரவர்த்தி எவ்வாறு விரதமிருந்து விண்ணுலகிலிருந்து தியாகேச மூர்த்தி யையும் மற்ற ஆறு விடங்க மூர்த்திகளையும் இவ்வுலகிற்குக் கொண்டுவந்து திருவாரூரிலும் மற்ற ஆறு விடங்கத் தலங்களிலும் ஸ்தாபித்தார் என்பது கூறப்பெற்றுள்ளது. திருவாரூர் திருக்கோயிலிலுள்ள விக்கிரமசோழனின் கல்வெட்டிலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் திருவாரூரில் வாழ்ந்த மனுநீதிச் சோழனின் வரலாறு விரிவுறக் கூறப்பெற்றுள்ளது.

இவ்விலக்கியங்களில், ஆழங்கால்பட்ட பிரதானி சிங்காதனம் இலக்கியக் கூற்றுகள் முழுமையையும் தம் ஓவியப் படைப்பில் வெளிக்காட்டியுள்ளார். புலமை நலம் இல்லாதிருக்குமாயின் இத்தகைய ஓவியங்களைப் படைப்பது இயலாததாகும்.பிற்காலத்திய ஓவியப் படைப்புகளிலும் மேற்கத்திய ஓவியங்களிலும், நவீன ஓவியங்களிலும் படைப்பாளிகள் தங்கள் பெயரைத் தாம் படைத்த ஓவியக் காட்சிகளின் வலது கீழ்க்கோடியில் எழுதுவது வழக்கமாகவுள்ளது.

பண்டைய ஓவியங்களில், குறிப்பாக இந்திய ஓவியங்களில் படைப்பாளிகளின் பெயர்களைக் காண முடியாது.அஜந்தா ஓவியங்களிலும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஓவியங்களிலும் அந்த ஃபிரஸ்கோ ஓவியப் படைப்பாளிகளைப் பற்றிய எந்தவொரு குறிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது. திருவாரூர் ஓவியக்கூடத்தைப் படைத்த ஓவியன் சிங்காதனம், தன் படைப்புகளில் தன் பெயரை மட்டும் எழுதவில்லை. தன் உருவத்தை எங்கெல்லாம் இடம்பெறச் செய்ய முடியுமோ அங்கெல்லாம் இடம்பெறச் செய்துள்ளான். அவ்வாறு செய்யும்போது புராண வரலாற்றுக்கு இடையூறாக இல்லாமல், தன் காலத்தில் நிகழ்ந்த ஆரூர் விழாக்களின் காட்சிகள், திருக்கோயில் காட்சிகள் ஆகியவற்றில் தன் உருவத்தை இடம்பெறச் செய்ததோடு, அருகே தன் பெயரையும் விளக்கக் குறிப்பையும் எழுதியுள்ளான்.

தலையில் முண்டாசு, முகத்தில் தாடி மீசை, இடுப்பில் வேஷ்டி, அதன்மேல் சுற்றப் பெற்ற துண்டு, நெற்றியில் திருநீறு, காதுகளில் காதணி, இறைவனை வணங்கும் கூப்பிய கரங்கள் இவைதாம் சிங்காதனத்தின் தோற்றம். சில இடங்களில், சிங்கா தனம் தரித்துள்ள துண்டில் ‘‘சிங்காதனம்’’ எனப் பெயர் எழுதப் பெற்றிருக்கும். சில காட்சிகளில் அவர்தம் காலுக்குக் கீழாக ‘‘ராயசாமந்தனார் வாசல் பிரதானி சித்திர வேலை சிங்காதனம்’’ என்றும், ‘‘இந்த சித்திரம் எழுதுகிற சித்திர வேலை சிங்காதனம் சதாசேவை’’ என்றும் எழுதப் பெற்றுள்ளமையைக் காணலாம். தம்முடைய ஓவியத்தைக் காட்டுமிடங்களிலெல்லாம் ஆரூரில் அவர் காலத்தில் வாழ்ந்த பலரின் உருவங்களையும் ஓவியமாகத் தீட்டி, அருகே அவர்கள் யார் யார் என்ற குறிப்புகளையும் காட்டியிருப்பது சிறப்புக்குரியதாகும்.

முசுகுந்தன் என்ற அரசன் இந்திரனுக்குப் போர் உதவி செய்வதற்காக நவவீரர்க ளுடன் தேவலோகம் சென்று, வாரகலி அசுரனுடன் போர் புரிந்து இந்திரனுக்கு வெற்றி ஏற்படச் செய்தல், பின்பு அங்கு சில நாட்கள் தங்கியிருந்தபோது இந்திரன் பூஜிக்கும் தியாகராஜ மூர்த்தியின் திருவுரு தனக்கு வேண்டும் எனக் கேட்டல், இந்திரன் அதனைக் கொடுக்க மனமின்றி தேவதச்சன் உதவியுடன் அதுபோன்றே ஆறு திருமேனிகளைச் செய்து ஏழு மூர்த்திகளையும் ஓரிடத்தில் வைத்து எந்த மூர்த்தியை வேண்டுமாயினும் எடுத்துச் செல் எனக் கூறுதல், ஈசன் அருளால் உண்மையான தியாகவிடங்கரை முசுகுந்தன் கண்டுபிடித்து எடுத்தல், ஏமாற்றமுற்ற இந்திரன் மற்ற ஆறு திருமேனிகளையும் பூலோகத்திற்கு எடுத்துச் செல்லும்படி வேண்ட, அதன்படியே பூலோகம் எடுத்து வருதல், முசுகுந்தன் தேவதச்சன் உதவியுடன் திருவாரூரே மூலவிடங்கர் வைக்க ஏற்ற தலம் என அறிந்து கூற, முசுகுந்தனும் திருவாரூரில் தியாகேசரை தாபித்து அம்மூர்த்திக்கு விழாக்கள் எடுத்துக் கொண்டாடுதல் வரை சிங்காதனம் தேவாசிரிய மண்டபத்து விதானத்தில் ஓவியக் காட்சிகளாகப் படைத்தார்.

இக்காட்சித் தொடருக்கு அருகே, இந்திரனுக்கு தியாகமூர்த்தி எவ்வாறு கிடைத்தார் என்ற மற்றொரு புராண வரலாறும் தீட்டப்பெற்றுள்ளது. விஷ்ணுமூர்த்தி, தியாகர் உருவத்தைப் படைத்து தன் மார்பில் வைத்து பூஜித்து வந்ததாகவும், பின்பு இந்திரன் திருமாலிடமிருந்து அதனைப் பெற்று பூஜித்ததாகவும் அக்காட்சிகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

ஒவ்வொரு காட்சிக்குக் கீழாகவும் ஓலையில் எழுதப்பெற்றிருப்பது போன்றே காட்சி விளக்கம் தெளிவாக எழுதப் பெற்றுள்ளது. பெரும்பாலும், மக்களின் பேச்சு வழக்கிலேயே காட்சி விளக்கங்கள் அமைந்திருப்பது சுவை பயப்பதாகும். மொழியியல் மற்றும் வட்டாரப் பேச்சு வழக்குகள் பற்றிய ஆய்வு செய்வோருக்கு சிங்காதனம் எழுதியுள்ள புராண விளக்கங்களும், விழாக்கள் பற்றிய செய்திகளும் பயனுடையனவாய் அமையும். முசுகுந்த புராணம், திருவாரூர் கோயில் விழாக்கள் போன்றே மனுநீதிச் சோழன் வரலாறு சுவரில் தீட்டப் பெற்றிருந்தாலும் அவ்வோவியங்களின் பணி முடியாத காரணத்தால் காட்சி விளக்கக் குறிப்புகள் குறைவாகவே காணப்பெறுகின்றன.

சுவரில் ஓவியம் தீட்டுதல் என்பது எளிது. ஆனால், மண்டபக்கூரைகளில் ஓவியங்கள் தீட்டுவது மிகக் கடினமானதாகும். சாரங்களின்மேல் படுத்தவண்ணம் ஓவியம் தீட்ட வேண்டும்.
தூரிகையில் வண்ணங்களைத் தோய்த்து எடுத்து விதானங்களில் தீட்டுவது மிகக் கடுமையான சோதனையாகும். அதனைச் சாதித்த சிங்காதனத்தின் திறமையோ நம்மை வியப்பில்
ஆழ்த்தும்.

வாரகலி அசுரனுடன் நடக்கும் போர்க்காட்சிகள், யானை, குதிரை, காலாட் படைகள் ஆகியவற்றின் அணிவகுப்பு ஆகியவை மிக அற்புதமாகப் படைக்கப் பெற்றுள்ளன. இந்திரனும் முசுகுந்தனும் செலுத்தும் அம்புகளில் ‘‘செயம்’’ என்றும், வாரகலி அசுரன் எய்யும் அம்புகளில் ‘‘அவஜெயம்’’ என்றும் எழுதப் பெற்றிருப்பது இந்திரனின் வெற்றியை நமக்குக் காட்டும் வகையில் அமைந்துள்ளன. இவ்வோவியக் கூடத்தில் இடம்பெற்றுள்ள தெய்வ உருவங்களும், மனிதர்களும் அணிந்துள்ள ஆடைகளில் பல்வேறு வகையான நுட்பங்களைக் காண முடிகிறது. ஆடை அமைப்பு முறை, துணிகளில் காணப்பெறும் வண்ணங்களும் அச்சு வேலைப்பாடுகளும் மிகச் சிறப்பாக உள்ளன.

டெக்ஸ்டைல் டிசைன்ஸ் என தற்காலத்தில் திகழும் தனித்த கலைத்துறை பயில்வோர்க்கு இங்கு காணப்பெறும் வடிவமைப்புகள் சிறந்த விருந்தாகும். அதுபோன்றே அணிகலன்களும் வகை வகையாகக் காட்டப் பெற்றுள்ளதும் சிறப்புக் குரியதாகும். கட்டடக்கலை பற்றிய ஓவியங்களும் இங்கு பலவுள்ளன. ஆரூர் கோயிலின் அமைப்பு, மற்ற கோயில்கள், மண்டபங்கள் என விதம்விதமான கட்டடங்களை இங்கு நாம் காண முடிகிறது. நாட்டியக் கலையின் பல்வேறு கூறுகளும் இங்கு சித்திரிக்கப் பெற்றுள்ளன.

அரசவை நாட்டியக் காட்சிகள், இறைவன் வீதியுலா வரும்போது நிகழும் நாட்டியக் காட்சிகள், தேவலோகத்தில் நிகழும் நாட்டியக் காட்சிகள் எனப் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் எல்லாம் பயன்படுத்தப்பெற்ற பல வகையான இசைக்கருவிகளை இங்கு நாம் காண முடிகிறது. திருவாரூர் கோயிலுக்கே உரிய பூதநிருத்தம் என்ற மத்தளம் இசைக்கும் மரபு, வீதியில் நிகழும் ஸ்ரீபலிபூசையின்போது நிகழும் நாட்டியம், பஞ்சமுக வாத்தியம் இசைத்தல் போன்ற நிகழ்வுகளும் காணப்பெறுகின்றன. திருவாரூர் கோயிலின் கொடியேற்று விழா தொடங்கி நாள்தோறும் நிகழும் மகோத்ஸவ நிகழ்வுகள் அத்தனையும் ஓவியக் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன.

தொகுப்பு: முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post சிங்காதனம் வரைந்த புராணம்! appeared first on Dinakaran.

Tags : Kunkumumam Spiritual Park ,Tirurubalattanam ,Arur Araniya ,Thirukoil ,
× RELATED தெளிவு பெறுவோம்