×

மோசடி நபர்கள் குறித்து எச்சரிக்கை பலகைகள் சிறுவாபுரி முருகன் கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் சேவைப் பணி என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றும் மோசடி கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி விழிப்புணர்வு பலகைகள் வைத்து கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.பெரியபாளையம் அருகே சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 6 வாரங்கள் தொடர்ச்சியாக வந்து முருகப்பெருமானை தரிசித்தால் தங்களது வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் வாரம்தோறும் செவ்வாய் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இக்கோயிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மோசடி கும்பல் சேவை பணி என்ற பெயரில், பக்தர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருகிறது. பணத்தை பெற்று கொண்டு பக்தர்களை இந்த மோசடி கும்பல் நுழைவாயில் பகுதியில் கூட்டமாக நிறுத்தி வைக்கின்றனர். இதனால் கோயிலுக்கு வரிசையில் நின்று வரும் பக்தர்களும் விஐபிக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதைத் தொடர்ந்து கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் சிறுவாபுரி கோயில் வளாகத்தை சுற்றிலும் சேவை பணி எனும் பெயரில் செயல்படும் மோசடி நபர்களை நம்பி ஏமாறவேண்டாம் என எச்சரிக்கை விழிப்புணர்வு பலகைகளை வைத்துள்ளனர்.

மேலும், அங்கு சேவை பணி என்ற பெயரில் சுற்றி வந்த மோசடி நபர்களும் வெளியேற்றப்பட்டனர். இதுதவிர, சிறுவாபுரி முருகன் கோயிலில் சேவை பணி என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி வரும் மோசடி நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கும்படி கோயில் நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

The post மோசடி நபர்கள் குறித்து எச்சரிக்கை பலகைகள் சிறுவாபுரி முருகன் கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Churuvapura Murugan Temple ,Dinakaran ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...