×

டெல்லி விரைந்தார் அண்ணாமலை தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்?: நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டம்

சென்னை: அதிமுகவை கூட்டணியில் சேர்ப்பதால் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலையை உடனடியாக டெல்லிக்குவரும்படி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதால், இன்று காலையில் அவசரமாக விரைந்துள்ளார். அதேநேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கவும் மேலிடம் முடிவு செய்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் அதிமுக தற்போது 4 அணிகளாக உடைந்துள்ளது.

அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி அணியில் உள்ளதால், கட்சியும், சின்னமும் அவரிடம் உள்ளது. இதனால், எடப்பாடியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்த பாஜக, அவரை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தியது.அதிமுகவில் உள்ள மற்ற அணிகளையும் இணைக்க வேண்டும் என்று அமித்ஷா விடுத்த கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. ஆனாலும் அவருடன் கூட்டணி வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தமிழகத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலை விரும்புகிறார். இதற்காக தனி அணி அமைப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தநிலையில் டெல்லியில் வருகிற 18ம் தேதி நடக்கும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜ தேசிய தலைவர் நட்டா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து கேள்விப் பட்டதும் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்தார்.

அதேநேரத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை, அவர் மீது அமித்ஷாவிடம் புகார் செய்தார். அதில் செந்தில்பாலாஜி விவகாரம் முதல் பல்வேறு விவகாரங்களில் ஆளுநரின் செயல்பாட்டால் ஒன்றிய அரசுக்கும், தமிழக பாஜகவுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளதாக புகார் கூறியிருந்தார். இதனால் டெல்லிக்கு ஆர்.என்.ரவியை வரும்படி ஒன்றிய அரசு அழைத்திருந்தது. அதன்படி டெல்லி சென்ற கவர்னர், 5 நாட்கள் முகாமிட்டிருந்தார். அமித்ஷா மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்தநிலையில், அண்ணாமலையை டெல்லிக்கு வரும்படி மேலிடம் அழைத்துள்ளது. இதனால் இன்று காலையில் அவர் அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று மற்றும் நாளை அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜக பிரச்னை மேலிடத்துக்கு தலைவலியாக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று கூறும் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடனும் மோதல் போக்கை கடைப் பிடித்து வருகிறார்.

இதனால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக அண்ணாமலையை தற்காலிகமாக மாற்றலாமா? அல்லது அவருக்கு மேல் ஒரு பதவியை உருவாக்கி யாரையாவது நியமிக்கலாமா என்று மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதில் தற்போது நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனை, கட்சிப் பணிக்கு அனுப்ப மேலிடம் முடிவு செய்துள்ளது. இதற்காக அவரிடமும் ஆலோசனை நடத்தியுள்ளது. அவர் தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு மேல் ஒரு பதவியை உருவாக்கி நியமிக்கப்படுவார் அல்லது அண்ணாமலையை மாற்றி விட்டு அவர் மாநில தலைவராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனை நடக்கும் நேரத்தில் அண்ணாமலையை திடீரென டெல்லிக்கு வரும்படி அழைத்துள்ளது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post டெல்லி விரைந்தார் அண்ணாமலை தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்?: நிர்மலா சீதாராமனுக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Anamalai ,Tamil Nadu ,Bajaka ,Nirmala Sitharaman ,Chennai ,Annamalayas ,Thirukku ,Anamalai Tamil Nadu Bajaka ,
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...