×

அசத்தும் அரசுப்பண்ணை :ஆண்டுக்கு 2 முறை மாம்பழ விளைச்சல்

கன்னியாகுமரி மாவட்டம் கேரள மாநிலத்தோடு இணைந்திருந்தபோது, 1922ம் ஆண்டில் கன்னியாகுமரியில் அரசு தோட்டக்கலைப்பண்ணை துவங்கப்பட்டது, அப்போதைய திருவிதாங்கூர் மூலம் திருநாள் மகாராஜாவால் இந்த பண்ணை துவங்கப் பட்டதற்கு ஒரு பிரதான காரணம் இருக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜாவின் அரண்மனைக்கு மாம் பழங்கள் மற்றும் இதர பழங்கள் அனுப்பு வதற்காகவே இது துவங்கப்பட்டது. பின்னர் 1953ல் அரசு பழத்தோட்டமாக மாற்றப்பட்டது. தொடக்கத்தில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட இப்பழத்தோட்டம் பின்னர் 13.64 ஏக்கர் நிலப்பரப்பு கூடுதலாக தனியாரிடமிருந்து பெறப்பட்டு மொத்தம் 31.64 ஏக்கர் பரப்பளவாக அதிகரிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவில் இருந்து பிரிந்து தமிழ்நாட்டோடு 1956ம் ஆண்டு இணைந்தபோது இந்தப் பண்ணையின் பொறுப்பு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. நாகர்கோவில் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பண்ணை 1969ம் ஆண்டு வரை வேளாண் துறையால் பராமரிக்கப்பட்டு ஆராய்ச்சி நிலையமாகவும், மாதிரி பண்ணையாகவும், பல்வேறு பழச்செடிகளை உற்பத்தி செய்வதற்கான நாற்றங்கால் மையமாகவும் செயல்பட்டு வந்திருக்கிறது. 1979ல் வேளாண்துறையிடமிருந்து தோட்டக்கலைத்துறை என்ற துறை உருவாக்கப்பட்டபோது இப்பண்ணை புதியதாக தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் அரசு தோட்டக்கலை பண்ணை என்று அழைக்கப்பட்டது. இப்பண்ணையின் நுழைவுப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்தாலும் பேச்சிப்பாறை அணை தண்ணீர் பண்ணைக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மூலம் மகாராஜா பண்ணையை சானல் இருக்கும் பகுதி நோக்கி திருப்பி அமைத்துள்ளார்.

கன்னியாகுமரி பகுதியின் சராசரி மழை அளவு 600 மி.மி.. இப்பகுதி ஒரு மழை மறைவு பகுதியாக இருந்ததாலும், நிலத்தடி நீர் சரிவர இல்லாததாலும், கிணறுகள் அமைக்க இயலாததாலும் பேச்சிப்பாறை அணை தண்ணீரை நம்பியே இப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சேமிக்க பண்ணையில் ஒரு சிறிய குளம் (குட்டை) மகாராஜாவால் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குளத்தில் உள்ள தண்ணீரை ஆயில் இஞ்சின் மூலம் பண்ணையின் பிற பகுதிகளுக்கு கொண்டுசென்று மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் சுமார் 50க்கும் அதிகமான மா ரகங்கள் மற்றும் சப்போட்டா, கொய்யா, பலா, திராட்சை போன்ற பழச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. எனினும் மா மரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதிக அளவில் மா மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. மா மரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை காய்ப்பதற்காக 1971க்கு முன்பு வரை தனியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பயனாக இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் ஆண்டுக்கு இருமுறை இங்கு மாமரங்கள் காய்த்து பழம் தருகின்றன. பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருக்கும் இப்பண்ணை இன்று வரை கேரள மக்களின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் அரசு தோட்டக்கலைப்பண்ணை இல்லாத காரணத்தினாலும், அரசு மானிய திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டதாலும் செடிகளின் தேவை அதிகரித்தது. இதனால் பழமையான இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட தரமான செடிகள் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்ட விவசாயிகளுக்கும், தனியார் பண்ணைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டன. தென் மாவட்டங்களில் பெரும்பாலான தனியார் நர்சரிகளில் உள்ள தாய்ச்செடிகள், விசாயிகளின் தோட்டம் மற்றும் வீடுகளில் உள்ள பழச்செடிகள் இப்பண்ணையிலிருந்து எடுத்து நடப்பட்டவையே.‘‘பழத்தோட்டத்தில் மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை, பலா, தென்னை மற்றும் மலர்ச்செடிகள், மரச்செடிகள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செடிகள், மற்றும் மரச்செடிகள், மலர்ச்செடிகளை மக்கள் நேரடியாக வந்து வாங்கிச்செல்லலாம். குமரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு மானியத்தில் பல்வேறு செடிகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வருடம்தோறும் எவ்வளவு மானியத்தில் வழங்கப்படுகிறது என்ற விவரம் கிடைத்தவுடன், மானியத்தில் கொடுக்க வேண்டிய செடிகளை தவிர மற்ற செடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறோம். வெளி மாவட்டங்களுக்கு மானியத்தில் செடிகள் தேவைபட்டாலும், அனுப்பி வைக்கிறோம். அந்த வகையில் திருச்சி, மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செடிகள் எடுத்துச் செல்லப்படுகிறது. பழத்தோட்டத்தில் காய்க்கும் மாங்காய்களை ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு முதல் பழத்தோட்டத்தில் விளைவிக்கப்படும் அனைத்து பழங்களையும் பொதுமக்களுக்கு தோட்டக்கலைத்துறை நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ஒருவருக்கு ஒரு கிலோ முதல் 100 கிலோ வரை பழங்கள் விற்பனை செய்யப்படும். பழத்தோட்டத்தில் அதிகளவில் மாங்கன்று விற்பனையாகிறது. ஒரு வருடத்தில் 50 ஆயிரம் மாங்கன்றுகள் விற்பனையாகிறது.

பழத்தோட்ட பண்ணை மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவில் மொத்தம் 88 பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள்’’ என்கிறார் பழத்தோட்டம் தோட்டக்கலை அலுவலர் சக்திவேல். ‘‘18 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்ட இப்பழத்தோட்டம் பின்னர் 31.64 ஏக்கராக விரிவடைந்தது. மகாராஜா கட்டிய குளம் மட்டுமே தண்ணீர் வசதிக்காக இருந்த நிலையில் மேலும் இரண்டு சிறிய குளங்களும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தண்ணீர் சேகரித்து வைக்கும் 25 தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. வேலி பாதுகாப்பே இல்லாத இப்பண்ணையில் இன்று பண்ணையை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலக்கட்டத்தில் சுமார் 10000 செடிகள் உற்பத்தி செய்ப்பட்ட நிலையில் தற்போது 12,00,000 செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பண்ணையில் செடிகள் உற்பத்தியை அதிகரிக்க ஒரு பனித்துளிக்கூடம், 6 நிழல் வலைக்கூடம் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண்ணை சுற்றுலாத்திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பண்ணையில் தற்போது நாற்றுப்பண்ணையைத் தவிர சாக்லேட் உற்பத்தி நிலையம், உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் மற்றும் டிரைகோடெர்மா விரிடி உற்பத்தி நிலையம், அங்கக பொருட்களான மண்புழு உரம், மீன் அமினோ அமிலம் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, முயல் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு பிரிவுகளும் செயல்படுகின்றன. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாட்டு வண்டி சவாரியும் இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இப்பண்ணையில் தற்போது ஒரு தோட்டக்கலை அலுவலர், ஒரு உதவி தோட்டக்கலை அலுவலர், 36 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 33 தற்காலிக பணியாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இப்பண்ணையில் கடந்த 5 ஆண்டுகளில் 49.80 லட்சம் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.496.62 லட்சம் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது’’ என்கிறார் தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜான்.

சுற்றுச்சூழல் பூங்கா

அரசு தோட்டக்கலைப்பண்ணையின் நிலப்பரப்பான 31.64 ஏக்கரில் 15.17 ஏக்கர் பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்கா ஒன்று ரூ.4 கோடி மதிப்பீட்டில் 05.04.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. இந்த சுற்றுச்சூழல் பூங்கா கேரள கலை நயத்துடன் கூடிய தோரண நுழைவுவாயில், வெண்சங்கு, நீரூற்று பூங்கா, ஒளி விளக்குடன் கூடிய நீர் வீழ்ச்சி, சிறுவர் விளையாட்டுத் திடல், மூங்கில் பூங்கா, பசுமை குடில், பனை பூங்கா, அகன்ற திறந்த புல்வெளி தரை, கொடிகளை தாங்கும் தடுக்கு, மேற்கூரை மண்டபம், திறந்த வெளி உணவகம், அங்காடி வளாகம், வாகனம் நிறுத்தும் இடம், நவீன சுகாதார வளாகம் என பல வசதிகளுடன் சிறுவர் முதல் பெரியவர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் பூங்காவை இதுவரை 4,87,682 மக்கள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.149.14 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.

செடிகளின் விலை

நெடுங்கொட்டு ரக மா-ரூ.70, குருத்தொட்டு ரூ.50, சப்போட்டா ரூ.60, பலா ரூ.50, கொய்யா பதியம் ரூ.30, மாதுளை பதியம் ரூ.30, நாவல் ரூ.30, கொடுக்காப்புளி ரூ.10, பப்பாளி ரெட் லேடி ரூ.20, தென்னை கன்று ரூ.60, நெல்லி ஒட்டு ரூ.40, பூச் ெசடிகள் ரூ.15 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை தவிர மரசெடிகளாக பூவரசு, புன்னை, தேக்கு உள்ளிட்ட மரசெடிகள் ஒரு செடி ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பழங்கள் மூலம் வரும் வருமானம்

2014-15ம் வருடம் ரூ.57 ஆயிரம், 2015-16ம் வருடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், 2016-17ம் வருடம் ரூ.1 லட்சத்து 92 ஆயிரம், 2017-18ம் வருடம் ரூ.70 ஆயிரம், 2018-19ம் வருடம் ரூ.80 ஆயிரத்திற்கு ஏலம் போனது. அதன்பிறகு நேரடியாக பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில் 2019-20ம் வருடம் ரூ.1 லட்சத்து 82 ஆயிரம், 2020-21ம் வருடம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரம், 2021-22ம் வருடம் ரூ.76 ஆயிரம், 2022-23ம் வருடம் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம், இந்த வருடம் இதுவரை ரூ.90 ஆயிரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு
தோட்டக்கலை துணை இயக்குநர்
ஷீலா ஜான் – 99942 23496.
பழத்தோட்டம் தோட்டக்கலை அலுவலர்
சக்திவேல் – 63795 41233.

The post அசத்தும் அரசுப்பண்ணை :ஆண்டுக்கு 2 முறை மாம்பழ விளைச்சல் appeared first on Dinakaran.

Tags : Kannyakumari District ,Kerala State ,Government Horticulture Farm ,Kannyakumari ,Thiruvidangur ,Magnanimous Government Force ,
× RELATED சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு...