×

பிரான்ஸ் நாட்டில் தீவிரமடையும் ரஃபேல் போர் விமான ஊழல் வழக்கு விசாரணை : ஒத்துழைப்பு வழங்குமாறு இந்திய அரசுக்கு நீதிமன்றம் கடிதம்!!

பாரீஸ் : ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்திய அரசுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, இந்திய ராணுவ, விமானப்படை மேம்பாட்டிற்காக ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ஒரு ரஃபேல் விமானம் ரூ.1,670 கோடி என ரூ.51,000 கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு விமானம் ரூ. 526 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், மோடி ஆட்சியில் அதிக விலைக்கு வாங்குவது ஏன் என கேள்வி எழுந்தது.

மேலும் ரஃபேல் ஒப்பந்தத்தை அணில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க ஒன்றிய பாஜக அரசு அழுத்தம் கொடுத்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் நேரடியாக குற்றம் சாட்டினார். இதனிடையே இந்த ஒப்பந்தத்திற்காக பிரான்சின் தசால்ட் நிறுவனம் இந்தியாவில் உள்ள எடை தரகருக்கு ரூ.8 கோடியே ரூ.60 லட்சம் லஞ்சம் கொடுத்ததை அந்நாட்டின் ஊழல் தடுப்புத்துறை கண்டுபிடித்தது. ரஃபேல் ஊழல் வழக்கை விசாரிக்க சில தினங்களுக்கு முன்னர் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ரஃபேல் ஊழல் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்திய அரசுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் கடிதம் எழுதி இருப்பதாக அந்நாட்டின் பிரபல செய்தித் தளமான மீடியா பார்ட் கட்டுரை வெளியிட்டுள்ளது. மேலும் ரஃபேல் ஒப்பந்தத்திற்காக மோடி பிரான்ஸ் சென்று வந்த பின்னர் சுமார் ரூ.1,378 கோடி வரிக்குறைப்பு கேட்டு அனில் அம்பானி பிரான்ஸ் அரசுக்கு கடிதம் எழுதியதாக மீடியா பார்ட் கட்டுரை கூறுகிறது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான அணிவகுப்பில் இந்திய ராணுவப்படையின் ரஃபேல் விமானங்களும் பங்கேற்கின்றன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

The post பிரான்ஸ் நாட்டில் தீவிரமடையும் ரஃபேல் போர் விமான ஊழல் வழக்கு விசாரணை : ஒத்துழைப்பு வழங்குமாறு இந்திய அரசுக்கு நீதிமன்றம் கடிதம்!! appeared first on Dinakaran.

Tags : Rafale ,France ,Government of India ,Paris ,Rafale fighter air scandal ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம்...