×

பனிமலையில் சிக்கி தவித்த 21 தமிழக பக்தர்கள் மீட்பு: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

சின்னமனூர்: அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்று பனிமலையில் சிக்கி தவித்த தமிழக பக்தர்கள் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவர் சங்கர் (77). இவரது தலைமையில் தமிழகத்தை சேர்ந்த 21 பேர் கடந்த 4ம் தேதி, அமர்நாத் புனித யாத்திரை புறப்பட்டனர். அமர்நாத் கோயிலில் பனிலிங்கத்தை தரிசித்து விட்டு பால்டால் பகுதிக்கு வந்தடைந்தனர். இதனையடுத்து நிலச்சரிவு காரணமாக மணி காம்ப் என்ற இடத்தில் தங்கினர். அங்கு கடந்த 5 நாட்களாக போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் சிக்கி பரிதவித்து வந்தனர். இதில் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த செந்தில்குமார், ராஜாங்கம், உத்தமபாளையத்தை சேர்ந்த செல்லப்பாண்டி, செல்வி தம்பதியும் இருந்தனர்.

இவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், எங்களை மீட்டு தமிழகத்திற்கு நாங்கள் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதனடிப்படையில் தமிழ்நாடு அரசின் தீவிர முயற்சியால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து சென்னை சுற்றுலாத்துறை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டு, அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 3 மணி அளவில் 21 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு, பஸ் மூலமாக ஜம்மு – காஷ்மீர் ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை 5.50 மணிக்கு வந்தடைந்தனர்.

மீட்கப்பட்டவர்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை டெல்லியில் இருந்து ரயில் மூலம் தமிழ்நாட்டிற்கு அனுப்புவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து மீட்கப்பட்ட உத்தமபாளையம் செல்லபாண்டியன் கூறுகையில், ‘‘எங்களை மீட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தோம். அதனடிப்படையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் நாங்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது ஜம்மு-காஷ்மீர் ரயில் நிலையம் வந்தடைந்துள்ளோம். தற்போது உயிர் பயம் நீங்கி தமிழ்நாட்டிற்கு திரும்பும் சூழல் உருவானதால் மகிழ்ச்சியில் உள்ளோம். தமிழ்நாடு முதல்வருக்கும், தினகரன் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.

The post பனிமலையில் சிக்கி தவித்த 21 தமிழக பக்தர்கள் மீட்பு: முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Chinnamanur ,Amarnath ,Chennai ,
× RELATED பாஜ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம்...