புதுடெல்லி: எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், சிறு குற்றங்களை குற்றமற்றதாக்க, 42 சட்டங்களில் 183 விதிகளை திருத்தும் ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எளிதாக வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில், நிறுவனங்களின் சிறு குற்றங்கள் குற்றமற்றதாக்கும் வகையிலான ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்த மசோதாவை ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா 19 அமைச்சகங்களால் நிர்வகிக்கப்படும் 42 சட்டங்களில் 183 விதிகளை திருத்தம் செய்ய வழிவகுக்கும்.
இதில் திருத்தங்களை ஏற்று அதனை நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் சமர்பித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜன் விஸ்வாஸ் சட்ட திருத்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா வணிகம் செய்வதை எளிதாக்குவதோடு நீதிமன்றங்களில் வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும் வழிவகுக்கும் என ஒன்றிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பேரிடர் மீட்பு பணிக்காக ரூ.7,532 கோடி விடுவிப்பு
மாநில பேரிடர் மீட்பு நிதிகளுக்காக 22 மாநில அரசுகளுக்கு ரூ.7,532 கோடி நேற்று விடுவித்தது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி, இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி, ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.493.60 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.348.80 கோடி, கேரளாவிற்கு ரூ.138.80 கோடி, தெலங்கானாவிற்கு ரூ.188.80 கோடி, இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ.180.40 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
The post சிறு குற்றங்களை குற்றமற்றதாக்கும் ஜன் விஸ்வாஸ் மசோதா அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.
