பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை உரிமை கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ தங்க, வைர, வெள்ளி ஆபரணங்களை தங்களிடம் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதாவின் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி மோகன் தனது தீர்ப்பை நேற்று வழங்கினார்.
இதில், ‘’சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர், இறந்து விட்டார் என்ற காரணத்திற்காக வழக்கில் பறிமுதல் செய்த சொத்துகளை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது. வழக்கே வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பானது என்பதால் பறிமுதல் செய்த சொத்துகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் வைத்துள்ள கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று உத்தரவிட்டார்.
மேலும் ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தாக்கல் செய்துள்ள மனுவில் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த பட்டு சேலைகள், சால்வைகள், காலணிகளை ஏலம் விட வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த பொருட்கள் எங்குள்ளது என்பதை தமிழக ஊழல் தடுப்பு படை போலீசார் கண்டறிந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வோம் என்று மனுதாரர்கள் வக்கீல் தெரிவித்தார்.
The post சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதா சொத்துகளுக்கு உரிமை கோரிய தீபா மனு தள்ளுபடி: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.
