×

பாஜவுக்கு எதிராக பெங்களூருவில் வரும் 17ம் தேதி ஆலோசனை கூட்டம் 24 கட்சிகளுக்கு சோனியா அழைப்பு: முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம்

புதுடெல்லி: பெங்களூருவில் நடக்க உள்ள 2வது ஒற்றுமை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 24 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வது, கூட்டு பேரணிக்கு திட்டமிடுவது உள்ளிட்டவை குறித்து பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஓரளவு வெற்றியும் கிடைத்துள்ளது.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஏற்பாட்டின் கீழ், அம்மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் ஒற்றுமை கூட்டம் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 15 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதில், பாஜவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், கூட்டணி தொடர்பாக தொடர்ந்து ஆலோசிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் 2வது ஒற்றுமை கூட்டம் பெங்களூருவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் கர்நாடகாவில் பாஜவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்துகிறது. வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், 17ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இரவு விருந்து அளிக்கிறார். அதைத் தொடர்ந்து, 18ம் தேதி முறைப்படி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.

இந்நிலையில், 17ம் தேதி இரவு விருந்தில் பங்கேற்க வருமாறு 24 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த முதல் கூட்டத்தில் 16 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இம்முறை கூடுதலாக மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கேஎம்டிகே), விடுதலை சிறுத்தைகள், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்பி), பார்வேர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) உள்ளிட்ட 8 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகரித்துள்ளது. இந்த 24 கட்சிகளுக்கு மக்களவையில் 150 எம்பிக்கள் உள்ளனர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, எதிர்க்கட்சிகளுக்கு அனுப்பிய அழைப்பிதழில், ‘‘ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலான பல்வேறு முக்கியப் பிரச்னைகளை விவாதித்து, அடுத்த மக்களவை தேர்தலில் ஒற்றுமையாகப் போராடுவது குறித்து ஒருமனதாக உடன்படிக்கை ஏற்பட்டதன் மூலம் முதல் ஆலோசனை கூட்டம் பெரும் வெற்றி பெற்றது. இந்த விவாதங்களைத் தொடர்வதும், நாம் உருவாக்கிய உத்வேகத்தை மேலும் வலுப்படுத்துவதும் முக்கியம். எனவே, நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்குத் தீர்வு காண நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிப்பது, கூட்டணிக்கான கட்டமைப்பை உருவாக்க 3 செயற்குழுக்கள் அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் இடையே மாநில அளவில் இணக்கத்தை ஏற்படுத்துதல், கூட்டு பேரணிகளுக்கான அட்டவணையைத் தீர்மானித்தல் போன்றவை குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், பாட்னா கூட்டத்திற்கு பிறகு, சரத் பவாரின் தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித் பவார் பிரிந்து பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பாஜவின் உத்தியாக பார்க்கப்படுகிறது. அதே போல, மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் களமிறங்கின. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை வீழ்த்தி மீண்டும் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. தேர்தல் மோதலுக்கு பிறகு, முதல் முறையாக 3 கட்சிகளும் ஒரே களத்தில் சந்திக்க உள்ளன. எனவே, தேசிய அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

* பீகாரின் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 23ம் தேதி நடந்தது.
* இதில் 15 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
* வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்க உள்ள 2வது ஆலோசனைக் கூட்டத்தில் 24 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* இந்த 24 எதிர்க்கட்சிகளுக்கு மக்களவையில் 150 எம்பிக்கள் உள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சி கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது.

* ஆம் ஆத்மி பங்கேற்குமா?
பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க ஆம் ஆத்மி கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், டெல்லி அவசர சட்டம் குறித்து அடுத்த கூட்டத்திற்கு முன்பாக காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை உறுதிபடுத்த வேண்டும் என்றும், இதில் காங்கிரஸ் பகிரங்கமாக ஆதரிக்கவில்லை என்றால், அடுத்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் ஆம் ஆத்மி கூறி உள்ளது. எனவே பெங்களூரு கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா அல்லது வேறு நிலைப்பாட்டை எடுக்குமா என்பதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாஜவுக்கு எதிராக பெங்களூருவில் வரும் 17ம் தேதி ஆலோசனை கூட்டம் 24 கட்சிகளுக்கு சோனியா அழைப்பு: முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Sonia ,meeting ,Bangalore ,Baja ,New Delhi ,Congress ,2nd Solidarity Meeting ,Dinakaran ,
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....