×

விலைவாசி உயர்வை தடுக்க உடனடியாக 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு தேவை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘அத்தியாவசிய உணவுப் பொருட்களான கோதுமை, துவரம் பருப்பு வகைகளை மாநிலத்துக்கு 10,000 மெட்ரிக் டன் ஒதுக்க வேண்டும். இதன் மூலம் வெளிச்சந்தை விலையை கட்டுப்படுத்தலாம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு எழுதியுள்ள கடிதம்: உணவுப் பொருள் பணவீக்கத்தில் காணப்படும் கவலைக்குரிய நிலை குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன். உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதில் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, 2023 மே மாதத்தில், தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 12.65% ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 6.56% ஆகவும் பணவீக்கம் இருந்தது. இந்நிலையில், சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது. கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை மானிய விலையில் வழங்கி வருகிறது.

அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியுடைய பயனாளிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமையை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. மேலும், உணவு பொருட்களின் நகர்வு மற்றும் இருப்பை கண்காணித்து வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக, சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது, இதுதொடர்பாக கடந்த 10ம் தேதி விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் பல்பொருள் அங்காடிகள் / நியாயவிலைக் கடைகள் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய சில உணவுப் பொருட்களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இதற்கிடையில், ஒன்றிய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும். இந்த விஷயத்தில் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

The post விலைவாசி உயர்வை தடுக்க உடனடியாக 10,000 டன் கோதுமை, துவரம் பருப்பு தேவை: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Chief Minister ,BC ,G.K. Stalin ,Chennai ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...