×

நெம்மேலியில் 150 எம்.எல்.டி. கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: நெம்மேலியில் 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர் பகுதிகளில் ரூ.6.58 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தினை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று மக்கள் சேவை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர். பின்னர், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ், ரூ.30 லட்சம் மதிப்பில் ஜோதியம்மாள் நகரில் படிப்பகத்துடன் கூடிய நூலகக் கட்டிடம் கட்டும் பணிக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகளின் போது, அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் தற்போது நெம்மேலியில் 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு விரைவில் முதல்வரால் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், பேரூரில் 400 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட உள்ளது. சென்னை மக்களுக்கு 800 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல், 85 லட்சம் மக்களுக்கு 1000 எம்.எல்.டி. குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதலாக 250 எம்.எல்.டி. குடிநீர் வழங்குவதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சிகளில், மேயர் பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தெற்கு வட்டார துணை ஆணையாளர் எம்.பி.அமித், மண்டலக்குழுத் தலைவர்கள் துரைராஜ், எம்.கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நெம்மேலியில் 150 எம்.எல்.டி. கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Nemmeli ,Chief Minister ,Konoda ,Minister ,KN Nehru ,Chennai ,Kond ,
× RELATED தாம்பரம் பகுதிகளில் ஒருநாள் விட்டு...