×

300 ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி விலை ரூ.60: வாங்க அலை மோதிய மக்கள் கூட்டம்; விலை குறைவால் பெண்கள் பாராட்டு

சென்னை: இந்தியா முழுவதும் தக்காளி விலை ரூ.70க்கு மேல் ரூ.200 வரை மாநிலத்துக்கு ஏற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது. ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் நினைத்தாலும் தக்காளி விலையை குறைக்க முடியவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் தக்காளி விலை குறைந்த பட்சம் 70க்கு மேல்தான் விற்கிறது. இந்தியாவே மாநிலங்களில் பல தக்காளி விலை காரணமாக மக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசு அதை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை தக்காளி, வெங்காயம், மளிகை பொருட்கள் என பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிச் செல்லும், சில்லரை வியாபாரிகள் தங்கள் கடைகளில் கூடுதல் விலை வைத்து ரூ.140 முதல் ரூ.160 வரை விற்கின்றனர். தக்காளி விலை ஏற்றத்தினை கவனத்தில் கொண்டு பசுமை பண்ணை கடைகளை போல, சென்னையில் உள்ள 85 கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்தது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தன.

இதனையடுத்து, சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அத்தியாவசிய பொருட்களை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடமாடும் காய்கறி அங்காடி அமைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய வேண்டும், பல்பொருள் அங்காடிகளில் மளிகை பொருட்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி நேற்று முதல் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். அதே போல, தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை சார்பிலும் தக்காளி விற்பனையாகிறது. தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையின் மூலம் வெளிச்சந்தையில் தக்காளி ரூ.180க்கு விற்கப்படுகிறது. ஆனால், ரேஷன் கடைகளில் கிலோ தக்காளி ரூ.60க்கு கிடைப்பதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது என அவர்கள் தெரிவித்தனர்.

* கல்வி மட்டுமே நம்மை காக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை: கல்வி மட்டுமே நம்மை காக்கும் சொத்து என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள மாணவர் விடுதி கட்டிடத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டியதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: இன்னார் படிக்கலாம் இன்னாரெல்லாம் படிக்கக் கூடாதென இருந்த சமூக ஒடுக்குமுறையை ஒழிக்கக் கிளர்ந்தெழுந்தது திராவிட இயக்கம். கல்வியை தேடிச் சென்னை வரும் நமது மாணவர்கள் தங்கியிருக்க ‘திராவிடர் இல்லம்’ நிறுவினார் நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான நடேசனார்.

கல்வி மூலமாகவே ஒடுக்கப்பட்டோர் வளர்ச்சி காண முடியும் என உரிமை முழக்கம் செய்து, இரவு பள்ளிகளையும் விடுதிகளையும் தொடங்கினார் எம்.சி.ராஜா. அவரது பெயரில் ஆதிதிராவிட மாணவர்கள் தங்கி பயில, 1961ல் விடுதி அமைத்தார் பெருந்தலைவர் காமராஜர். அந்த விடுதியை நவீன வசதிகளுடன் புதுப்பித்து கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி, மாணவர்களுடன் உரையாடினேன். மாணவர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருவதுபோல், கல்வி மட்டுமே நம்மை காக்கும் சொத்து. கல்வியை அடைய எத்தகைய தடைகளையும் உடைத்தெறிவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 300 ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி விலை ரூ.60: வாங்க அலை மோதிய மக்கள் கூட்டம்; விலை குறைவால் பெண்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,India ,Union Government ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...