×

ஓலைச்சுவடிகளை பாதுகாக்க விட்ட டெண்டரில் ரூ.12.66 லட்சம் மோசடி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஜி.விஜயராகவன் மீது விஜிலென்ஸ் வழக்குப்பதிவு

சென்னை: ஓலைச்சுவடிகளை பாதுகாக்க டெண்டர் விட்டதில் ரூ.12.66 லட்சம் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஜி.விஜயராகவன் மற்றும் டெண்டர் எடுத்த நபர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை தரமணியில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவன இயக்குநராக ஜி.விஜயராகவன் இருந்தார். அவரது பணிக்காலத்தில் ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சார்பில் 2014ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது.

அதைதொடர்ந்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் குறிப்பிட்ட பணிகளுக்காக பதிவு பெற்ற கான்டிராக்டர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. ஆனால், அப்பணியில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத, அதுவும் ஒப்பந்த புள்ளி கோரப்பட்ட 2 நாட்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கொளத்தூர் பகுதியை தலைமையிடமாக கொண்ட ‘டெக் சாப்ட்வேர்’ என்ற நிறுவனத்துக்கு அரசு விதிகளுக்கு முரணாக 32 லட்சத்து 2 ஆயிரத்து 450 ரூபாய்க்கு ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு உள்ளிட்டவை டெண்டர் விடப்பட்டது.

டெண்டர் எடுத்த டெக் சாப்ட்வேர் நிறுவனத்துக்கு, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக இருந்த ஜி.விஜயராகவன் தன்னிச்சையாக ஒப்பந்தம் வழங்கியுள்ளார். அதற்கான பணம் 7 தவணைகளாக டெக் சாப்ட்வேர் நிறுவன இயக்குநர் விஜயகுமாருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 12 லட்சத்து 66 ஆயிரத்து 934 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் படி, லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார். அதில், குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ள நிறுவனத்துக்கு தான் அரசு விதிகளின் படி டெண்டர் வழங்க வேண்டும்.

ஆனால் எவ்வித முன் அனுபவமும் இல்லாத டெக் சாப்ட்வேர் நிறுவனத்துக்கு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் ஜி. விஜயராகவன், தனது நெருங்கிய நபரான டெக் சாப்ட்வேர் நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமாருக்கு தன்னிச்சையாக டெண்டர் வழங்கி அரசுக்கு ரூ.12.66 லட்சம் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. அதைதொடர்ந்து உலக ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஜி.விஜயராகவன் மற்றும் டெக் சாப்ட்வேர் நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமார் ஆகியோர் மீது ஐபிசி 120பி, 409 மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post ஓலைச்சுவடிகளை பாதுகாக்க விட்ட டெண்டரில் ரூ.12.66 லட்சம் மோசடி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குநர் ஜி.விஜயராகவன் மீது விஜிலென்ஸ் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : World Tamil Research Institute ,G. Vijayaraghavan ,CHENNAI ,G.Vijayaraghavan ,Dinakaran ,
× RELATED 2024ம் ஆண்டுக்கான தமிழ் முதுகலைப் பட்டம்...