×

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது: வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு ரயிலில் செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு 8 மணிக்கு தொடங்கிய நிலையில், அனைத்தும் 10 நிமிடங்களில் விற்பனையானது. இதையடுத்து டிக்கெட் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தமிழகத்தில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளியும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தீபாவளி நவம்பர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி, கே.கே.நகர் பஸ் நிலையங்களில் தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இங்கிருந்து பண்டிகை கொண்டாட ெபாதுமக்கள் குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

ரயில்களை பொறுத்த வரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாக ரயில்களில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்யலாம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று ரயில் டிக்கெட் ரிசர்வேஷன் தொடங்கியது. நவம்பர் 9ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் அடுத்த 10 நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இதனால் அதிகாலையில் இருந்தே டிக்கெட்டுக்காக வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

குறிப்பாக நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை, அனந்தபுரி, தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், தேஜஸ், குருவாயூர் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக புக் செய்யப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்பதிவு செய்ய கவுன்ட்டர்களில் காத்திருந்த பயணிகள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர். இன்று (13ம் தேதி) முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10ம் தேதியும் நாளை (ஜூலை 14) முன்பதிவு செய்தால் நவம்பர் 11ம் தேதியும், 15ம் தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை அன்றும் பயணம் செய்ய முடியும். ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

இந்த ஆண்டு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். எனவே பயணிகளின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும். எனவே, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட் ரிசர்வ் செய்வது நல்லது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், பொதிகை, அனந்தபுரி, தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், தேஜஸ், குருவாயூர் உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் முழுமையாக புக் செய்யப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையையொட்டி ரயில் டிக்கெட் முன்பதிவு 10 நிமிடத்தில் முடிந்தது: வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Diwali festivali ,Chennai ,Diwali ,
× RELATED ஹீரோவான வில்லன்