×

ஆட்கள் பற்றாக்குறையால் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் போக்குவரத்து துறை தனியார்மயமாகாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி

சென்னை: சென்னை பல்லவன் சாலையில் உள்ள மத்திய பணிமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு விரைவு போகுவரத்து கழகத்தில், ரத்ததான முகாமை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், பணியாளர்களுக்காக குளிர்சாதன ஓய்வு அறையினை அமைச்சர் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, பணியின் போது இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் 5 வாரிசுதாரர்களுக்கு பணியானையினை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து 14வது ஊதிய ஒப்பந்தத்தின்படி ஊதிய நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்கிட நிதி ஒதுக்கப்பட்டதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 10 பணியாளர்களுக்கு காசோலையினை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: போக்குவரத்து துறை முழுவதுமாக தனியார் மயம் என்பது இல்லை. அரசு விரைவு போகுவரத்து கழகத்துக்கு புதிய ஓட்டுநர், நடத்துனர் எடுப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பம் பெற உள்ளோம். புதிதாக ஓட்டுநர், நடத்தனர் நியமிக்கப்பட்டதும், ஒப்பந்த பணியாளர்கள் விடுவிக்கப்படுவார்கள். இது தற்காலிக ஏற்பாடு தான் நிரந்தரமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம், தனியார் மயம் எப்போதும் கிடையாது.

அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் காலிப்பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, அரசு விரைவு போகுவரத்து கழகத்திற்கு 610 பேர் எடுக்கப்படவுள்ளனர். புதிதாக பேருந்துகள் வாங்க டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 4200 புதிய பேருந்துகள் வாங்கப்படவுள்ளது, அரசு விரைவு போகுவரத்து கழகத்திற்கு 200 பேருந்துகள் வாங்கப்படவுள்ளது. வாகனங்களில் பொறுத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆட்கள் பற்றாக்குறையால் ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் போக்குவரத்து துறை தனியார்மயமாகாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Chennai ,Chennai Pallavan Road ,Government Express Transport Corporation ,Dinakaran ,
× RELATED வெயிலில் இருந்து போக்குவரத்து...