×

கீழ்பவானியில் நீர்வளம் நிலவளம் திட்டப்பணிகள் ஆய்வு: உலக வங்கி குழு பாராட்டு

ஈரோடு: தமிழகத்தில் உள்ள பாசன மேலாண்மையை நவீனமயமாக்கும் வகையில் தமிழக அரசு உலக வங்கி பங்களிப்புடன் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. நீர்பாசன விவசாயத்தின் உற்பத்தி திறன் மற்றும் கால நிலையை எதிர்க்கும் தன்மையை மேம்படுத்துதல், பயிர்களை பல்வகைப்படுத்துதல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில் முனைவோருக்கு சந்தை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஈரோடு மாவட்டத்தில் நீர்வள நிலவளத்திட்டமானது ரூ.6.12 கோடி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் கீழ்பவானி வடிநிலப்பகுதியில் நீர்வளத்துறையின் மூலம் 8 அணைக்கட்டு மற்றும் கால்வாய்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வேளாண்துறை சார்பில் உழவர் வயல்வெளி பள்ளி, மண்புழு உரம் தயாரித்தல், தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி உற்பத்தி, பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நிலவள நீர்வளத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உலக வங்கிக்குழு பவானி அடுத்துள்ள கவுந்தப்பாடி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். உலக வங்கி குழு செயல்பாட்டு ஆய்வாளர் குழு உறுப்பினர் சாருலதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, திட்ட நிபுணர்கள், கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு இணை செயலாளர் வெங்கடாசலபதி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வின்போது, திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது கீழ்பவானி வடிநில வட்டத்தில் நீர்வளம் நிலவளம் திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக உலக வங்கி குழு செயல்பாட்டு ஆய்வாளர் சாருலதா பாராட்டுகளை தெரிவித்தார்.

The post கீழ்பவானியில் நீர்வளம் நிலவளம் திட்டப்பணிகள் ஆய்வு: உலக வங்கி குழு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kilpawani ,World Bank Group ,Erode ,Tamil Nadu, Tamil Nadu ,World Bank ,
× RELATED மாநகராட்சி பணியாளர்களுக்கு நீர் ஆகாரங்கள் வழங்கல்