×

சுவையான ரெசிபிகள்

ஓமு ரைஸ் ஆம்லெட் ரோல்டு ஃப்ரைட் ரைஸ்

தேவையான பொருட்கள்

வடித்த சாதம் – ஒரு கப்
குடைமிளகாய் – 1/4
வெங்காயம் – கால் கப்
மிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டி,
வேகவைத்த மக்காச்சோளம் – ஒரு தேக்கரண்டி,
தக்காளி சாஸ் – 4 தேக்கரண்டி,
முட்டை – 2,
உப்பு, எண்ணெய் – தாளிக்க மற்றும் ஆம்லெட் போட

செய்முறை

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயை சிறுசிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம், குடைமிளகாய் வதங்கியதும் அதனுடன் சாதம், மிளகுத் தூள் சேர்த்து கிளறி விடவும்.அதன்பின்னர் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். பிறகு அதில் மக்காச்சோளத்தை சேர்த்து கலந்து விடவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் அல்லது அகலமான தவாவை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அடித்து வைத்துள்ள முட்டையை அகலமான ஆம்லெட்டாக ஊற்றவும். இரண்டு நிமிடம் கழித்து ஆம்லெட் வெந்ததும் செய்து வைத்திருக்கும் ப்ரைட் ரைஸை ஆம்லெட்டின் நடுவில் வைக்கவும். பின்னர் ஆம்லெட்டின் இரண்டு பக்கங்களை உட்புறமாக படத்தில் உள்ளதுபோல் மடிக்கவும். ஓமு ரைஸ் தயார். பரிமாறும் தட்டினை ஓமு ரைஸின் மீது கவிழ்த்து வைக்கவும். தவாவினை தலைக்கீழாக கவிழ்த்து திருப்பி வைத்து ஓமுரைஸினை தட்டில் எடுத்துக் கொள்ளவும்.

முள்ளங்கி ராய்தா

தேவையானவை

முள்ளங்கி ஒன்று,
இஞ்சி சிறு துண்டு,
பச்சை மிளகாய் ஒன்று,
கொத்தமல்லித்தழை சிறிதளவு,
கடுகு, பெருங்காயத்தூள்,
எண்ணெய்,
கறிவேப்பிலை தாளிக்க தேவையான அளவு,
தயிர் ஒரு கப்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை

முள்ளங்கியை தோல் சீவி துருவவும். கொத்தமல்லி தழையுடன், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி சேர்த்து நைஸாக அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து உப்பு, அரைத்து வைத்த விழுது, துருவிய முள்ளங்கி சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காயவிட்டு… கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, முள்ளங்கி தயிர் கலவையுடன் சேர்த்துப் பரிமாறவும்.

வெள்ளரி மோர் கூட்டு

தேவையானவை

வெள்ளரிப் பிஞ்சு துண்டுகள் ஒரு கப்,
உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்,
கடுகு தாளிக்க தேவையான அளவு,
3பச்சை மிளகாய் 4,
கெட்டி மோர் ஒரு கப்,
தேங்காய் துருவல் 5 டீஸ்பூன்,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை

உளுத்தம்பருப்பை வெறும் வாணலியில் வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். வெள்ளரி துண்டுகளை தண்ணீர் விட்டு வேக வைத்து உப்பு, அரைத்த விழுது சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மோருடன் கலக்கவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.

முளைப்பயறு தோசை

தேவையானவை
முளைகட்டிய பயறு அரை கப்,
தோசை மாவு ஒரு கப்,
எண்ணெய்,
உப்பு தேவையான அளவு.

செய்முறை

முளைக்கட்டிய பயறுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனை தோசை மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை சற்று கனமான சிறிய தோசைகளாக வார்த்து, எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்

தேவையானவை

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்,
தேங்காய்ப் பால் தலா ஒரு கப்.

செய்முறை

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன் தேங்காய்ப்பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து நுரையுடன் பரிமாறவும். விரும்பினால் ஸ்ட்ராபெர்ரி பழத் துண்டுகளை மேலே சேர்த்து பருகலாம்.
தேங்காய்ப் பால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

The post சுவையான ரெசிபிகள் appeared first on Dinakaran.

Tags :
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...