×

இறவாதீஸ்வரர் கோயிலின் ஈடில்லா சிற்பங்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

ஆலயம்: இறவாதீஸ்வரர் கோயில், பெரிய கம்மாளத்தெரு, காஞ்சிபுரம், தமிழ்நாடு.

காலம்: இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன், பொ.ஆ. 700-729.

காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 கோயில் களில் ஒன்றான `அழியாத்தன்மையுடையது’ என்ற பொருள் கொண்ட `இறவாஸ்தானம்’, காஞ்சிபுரத்தில் அதிகம் அறியப்படாத பல்லவர் கால கோயில்.

மாபெரும் கலா ரசிகனாக போற்றப் படும் இராஜசிம்மனின் (இரண்டாம் நரசிம்மவர்மன், பொ.ஆ. 700-729) கலைப் படைப்புக்களில் ஒன்றாகக்கருதப்படுகிறது. பல்லவர்களின் சிற்பத்திறமையை இவ்வுலகுக்கு எடுத்தியம்பும் உலகப்புகழ் பெற்ற பல குடைவரை கோயில்கள் இவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையே. நகரின் மையப்பகுதியில் சுற்றிலும் வீடுகள் சூழ்ந்திருக்க, கருவறை, அர்த்த மண்டபம், 16 தூண்களைக் கொண்ட மகாமண்டப அமைப்புகளுடன் கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது இவ்வாலயம்.

பல மணற்கற்களான சிற்பங்கள் கால ஓட்டம், வானிலை காரணமாக அரிக்கப்பட்ட நிலையிலும், ஒவ்வொரு கலை ஆர்வலர்களின் கண்களுக்கும் விருந்தாக உள்ளன.வெளிப்புறச் சுவர்களை கால சம்ஹார மூர்த்தி மேலே சிவலிங்கத்தை கட்டியணைத்தபடி மார்க்கண்டேயர், கங்காவதாரண மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, சிவனின் விருச்சிக கர்ணம், ஜலந்தரனை வதம் செய்த பின்னர் யோக நிலையில் வீற்றிருக்கும் சிவன், பிக்ஷாடனர், கொம்புடன் காட்சியளிக்கும் துவாரபாலகர்கள், சங்கும் சக்கரமும் ஏந்திய பேரழகு துர்க்கை, கணேசர் போன்ற புடைப்புச்சிற்பங்களும், அழகிய மகர, சித்ர தோரணங்களும், சுவர்களின் மூலைப்பகுதியில் நின்றநிலையில் பெரிய சிம்மயாளி உருவங்களும் அலங்கரிக்கின்றன. பூத கணங்களின் உருவங்கள் மிகவும் சிதில மடைந்து சற்று தெளிவின்றி காணப்படுகின்றன.

சிதைந்திருந்தாலும் சில சிற்பங்களின் எழில் தோற்றமும், சிற்ப நேர்த்தியும் காண்போரைக்கவர்கின்றன. லிங்க வடிவில் உள்ள சிவன், `ம்ருத்யுஞ்சயேஸ்வரர்’ / இறவாதீஸ்வரர் / இறவாஸ்தானத்து இறைவன் என வணங்கப்படுகிறார். இறைவி ஸ்ரீகாமாட்சி. தொல்லியல் மரபுச்சின்னமாக விளங்கும் இவ்வாலயம், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தொகுப்பு : மது ஜெகதீஷ்

The post இறவாதீஸ்வரர் கோயிலின் ஈடில்லா சிற்பங்கள் appeared first on Dinakaran.

Tags : Eidilla ,Irivadeswarar Temple ,Kunkumum Spiritual Sculpture and Excellence Temple ,Great Kammalatheru ,Kanchipuram, Tamil Nadu ,Eidilla Sculptures ,Iravadeswarar Temple ,Dinakaran ,
× RELATED “ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி” சாதனை...