×

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி தூத்துக்குடியில் 30 பேரிடம் 490 பவுன் நகைகள் மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடி: ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேரிடம் 490 பவுன் நகைகள் மோசடி செய்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் செல்வம் மகன் மதன்குமார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் மனைவி கிரேனா (40), சுந்தரலிங்கத்தின் மனைவி ஜெயலட்சுமி (40), செல்லத்துரையின் மகன் பாக்கியராஜ் (25) ஆகிய மூவரும், தங்களிடம் நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அதில் கிடைக்கும் பணத்தை ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் ஆசை காட்டியுள்ளனர்.

மேலும், 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன், ரூ.10 ஆயிரமும் சேர்த்து கொடுப்பதாகவும், 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் கட்டுவதாகவும் கூறியுள்ளனர்.இதை நம்பிய மதன்குமார், கடந்த மே 6ம் தேதி தனது தாய் மற்றும் சகோதரியிடம் இருந்து 35 பவுன் நகைகள் மற்றும் 9ம் தேதி தனது உறவினர்களிடம் இருந்து 50 பவுன் நகைகளை வாங்கி 3 பேரிடமும் கொடுத்துள்ளார். ஏற்கனவே கூறியபடி கிரேனா, ஜெயலட்சுமி, பாக்கியராஜ் ஆகியோர் மதன்குமாருக்கு ரூ.40 ஆயிரம் கொடுத்துள்ளனர். ஆனால், கார் வாங்க முன்பணம் கட்டவில்லையாம். சந்தேகமடைந்த மதன்குமார், கடந்த ஜூன் 26ம் தேதி கிரேனா வீட்டிற்கு சென்று நகைகளை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மதன்குமார் கடந்த 1ம் தேதி தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார்.

அவர் பிறப்பித்த உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். அத்துடன் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஜெயராம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அந்தோனியம்மாள் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட கிரேனா, ஜெயலட்சுமி, பாக்கியராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்க நகைகளையும் மீட்டனர். மேலும் விசாரணையில், இதேபோல் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித்தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தில் 30 பேரிடம் 490 பவுன் நகைகளை மோசடி செய்தது அம்பலமானது. அது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

The post ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் பெற்று தருவதாக கூறி தூத்துக்குடியில் 30 பேரிடம் 490 பவுன் நகைகள் மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : SHARE MARKETS ,TUTUKUKUDI ,Thoothukudi ,SHARE ,Thoothukudi district ,SHARE MARKET ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...