சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு மீது விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செந்தில் பாலாஜி வழக்கு 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்கிறார். தங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறை பட்டியலிடுகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம்: துஷார் மேத்தா விளக்கம்
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்று துஷார் மேத்தா விளக்கம் அளித்து வருகிறார். அதன்படி, 2000-க்கு முன் சட்டவிரோத பண பரிமாற்றத்தால் பல நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இரு ஒப்பந்தங்கள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டன அவற்றில் இந்தியாவும் கையெழுத்திட்டு இருந்தது.
புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை:
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டாலும் புலன் விசாரணை செய்வது கடமை என்று வாதிட்டார். குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்குவதற்கும், சோதனை செய்யவும், புகார் வழக்கு தாக்கல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டார்.
காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி மறுக்க முடியாது:
காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி மறுக்க முடியாது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறைக்கு புலன் விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும். சட்டவிரோத பண பரிமாற்ற ஈடுபட்டவர்களை கைது செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.
விருப்பம் போல் கைது என்று கூறுவதா?
ஆதாரங்கள் சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை நடவடிக்கைகள் தான். 18 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூற முடியாது. வங்கி மோசடி வழக்குகளில், அமலாக்கத்துறை முயற்சியால் 19,000 கோடி ரூபாய் பணத்தை மீட்டு வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளன என்று துஷார் மேத்தா குறிப்பிட்டார்.
புலன் விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது:
அமலாக்கத்துறை தனிப்பட்ட அதிகாரம் உள்ள அமைப்பு. அமலாக்கத்துறைக்கு புலன் விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது. காவலில் வைத்து விசாரிக்கும் அமலாக்கத்துறை உரிமையை பறிக்க முடியாது. சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தான். ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது.
கைதுக்கு பின் புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபின் மேல் விசாரணை செய்யவும் அதிகாரம் உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட குற்றத்துக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டு என்பதால் கைது செய்தவரை அமலாக்கத்துறை ஜாமினில் விடுவிக்க முடியாது. ஜாமினில் விடுவிக்க முடியாது என்பதால் அமலாக்கத் துறைக்கான காவல்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அழுத்தங்களுக்கு அமலாக்கத்துறை உட்படுவதில்லை:
தவறான கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு 2 ஆண்டு சிறை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அதனால் தான் கைது எண்ணிக்கை குறைவாக உள்ளது. எந்த அழுத்தத்துக்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த கடுமையான பிரிவுகள் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
காவலில் விசாரிக்கும் உரிமையை பறிக்க முடியாது:
செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக இரு நீதிபதிகளும் கூறவில்லை. அமலாக்கத்துறைக்கு காவல்துறை அதிகாரம் இல்லை என வேறு சூழ்நிலையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. காவலில் விசாரிக்கும் அமலாக்கத்துறை உரிமையை பறிக்க முடியாது என்று வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார். செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
The post புலன் விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது; காவலில் வைத்து விசாரிக்கும் உரிமையை பறிக்க முடியாது: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வாதம் appeared first on Dinakaran.
