×

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பு வாதம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு மீது விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது. 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு செந்தில் பாலாஜி வழக்கு 2-வது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைக்கிறார். தங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறை பட்டியலிடுகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம்: துஷார் மேத்தா விளக்கம்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்று துஷார் மேத்தா விளக்கம் அளித்து வருகிறார். அதன்படி, 2000-க்கு முன் சட்டவிரோத பண பரிமாற்றத்தால் பல நாட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இரு ஒப்பந்தங்கள் உலகளவில் மேற்கொள்ளப்பட்டன அவற்றில் இந்தியாவும் கையெழுத்திட்டு இருந்தது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை:

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்கப்படாவிட்டாலும் புலன் விசாரணை செய்வது கடமை என்று வாதிட்டார். குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்குவதற்கும், சோதனை செய்யவும், புகார் வழக்கு தாக்கல் செய்யவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது
என்று குறிப்பிட்டார்.

காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி மறுக்க முடியாது:

காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி மறுக்க முடியாது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறைக்கு புலன் விசாரணை செய்யும் கடமையை மறுப்பதாகும். சட்டவிரோத பண பரிமாற்ற ஈடுபட்டவர்களை கைது செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.

மேலும் ஆதாரங்கள் சேகரிக்கும் அமலாக்கத்துறையின் அனைத்து நடவடிக்கைகளும் புலன் விசாரணை நடவடிக்கைகள் தான். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட குற்றத்துக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க முடியும். 18 ஆண்டுகளில் அமலாக்கத்துறையால் 330 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். விருப்பம் போல் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூற முடியாது என்று துஷார் மேத்தா குறிப்பிட்டார்.

அமலாக்கத்துறை தனிப்பட்ட அதிகாரம் உள்ள அமைப்பு:

அமலாக்கத்துறை தனிப்பட்ட அதிகாரம் உள்ள அமைப்பு. அமலாக்கத்துறைக்கு புலன் விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது. தவறான விசாரணை என்றால் விசாரணை அதிகாரிக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.

The post சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,ICourt Chennai ,Megala ,Minister ,Senthil Balaji ,Dinakaran ,
× RELATED ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை