×

பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: வாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் உறுதி

சென்னை: பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்து நிரந்தரமாக தீர்வு ஏற்படுகிற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார். சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் 5வது கூட்டம் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் மற்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டன.

மேலும், பத்திரிகையாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவதற்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான படிவங்கள் ஒப்புதல் பெறப்பட்டது. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பொருண்மைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிச்சயமாக பரிசீலனை செய்து நிரந்தரமாக தீர்வு ஏற்படுகிற வகையிலும், அதனை நிறைவேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கீழ்மட்டத்தில் இருக்கக்கூடிய பத்திரிகையாளர்கள், ஏழைக் குடும்பத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் அரசின் திட்டங்கள் கிடைக்கக்கூடிய வகையில் நிச்சயம் நடைமுறைபடுத்தப்படும்.

செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக கடந்த 1986ம் ஆண்டு முதல் தற்போது வரை 293 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 61 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இது ஒரு நல்ல முன்னேற்றம், உதாரணம் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, தொடர்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கின்ற பத்திரிகையாளர் நல வாரிய அலுவல்சார் மற்றும் அலுவல்சாரா உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் செல்வராஜ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் மற்றும் பி.கோலப்பன், லட்சுமி சுப்பிரமணியன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: வாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் உறுதி appeared first on Dinakaran.

Tags : Journalist Welfare Board ,Minister ,Saminathan ,Chennai ,
× RELATED மாநகராட்சி எல்லைகள்...