×

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே என்ற ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்: தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக உத்தரவிட்டுள்ளது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,‘‘ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதித்து, வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்’’என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவில், ‘‘ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் பொய் சான்றிதழ் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் என உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், ‘‘செயற்கை கருவூட்டல் முறை குறித்த முக்கிய அம்சங்களை சென்னை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனால் ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள தகுதி வாய்ந்த நாட்டு மாடுகள் உட்பட அனைத்துவகையான மாடுகளையும் அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த விவகாரம் என்பது மாநில அரசின் சட்டவிதிகள் மற்றும் கொள்கைக்கு உட்பட்டதாகும்’’ என வாதிட்டார். இதையடுத்து உத்தரவில், ‘‘இந்த விவகாராத்தை பொருத்தமட்டில் தமிழக அரசு உட்பட மாநில அரசுகளின் பதில் மனு கொண்ட கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்கிறது.அதனால் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகள் மட்டுமே என்ற ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்: தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,ECtHR ,Jallikattu ,Tamilnadu ,New Delhi ,High Court ,IC Court ,Tamil Nadu Government ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...