×

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

டொமினிகா: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, விண்ட்சர் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20ல் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டொமினிகா விண்ட்சர் பார்க் அரங்கில் இன்று தொடங்குகிறது. கிரிக்கெட் உலகை ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது தட்டுத்தடுமாறிக் கொண்டுள்ளது. ஒருநாள் உலக கோப்பையை 2 முறை வென்ற அந்த அணி, முதல் முறையாக இம்முறை உலக கோப்பையில் விளையாட தகுதி பெற முடியாமல் தலைக்குனிவை சந்தித்தது.

இதுவரை நடந்த 2 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களிலும் கூட வெஸ்ட் இண்டீசுக்கு கடைசி இடமே கிடைத்தது. சொந்த மண்ணில் இன்று தொடங்கும் டெஸ்ட் தொடரில், வெற்றிக் கணக்கை தொடங்கும் கனவுடன் கிரெய்க் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் களம் காண்கிறது. 2002க்கு பிறகு ஒரு தொடரில் மட்டுமல்ல, ஒரு ஆட்டத்தில் கூட இந்தியாவை வீழ்த்தியதில்லை என்ற சோக வரலாற்றை மாற்ற கார்ன்வால், ஹோல்டர், ஜோஷ்வா ட சில்வா, ரோச், ஜோசப், சந்தர்பால் ஆகியோர் அடங்கிய வெ.இண்டீஸ் அணி கடுமையாக முயற்சிக்கும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு களமிறங்கும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால், ரோகித் தலைமையிலான இந்திய அணியும் சற்று நெருக்கடியுடனே களமிறங்குகிறது. இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் வரிந்துகட்டுவதால் ஆட்டம் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

* கடைசியாக விளையாடிய 5 போட்டியில் இந்தியா 4ல் வென்றுள்ளது. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது.

* இந்தியாவுக்கு எதிராக 1948 முதல் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் வெ.இண்டீஸ், 2002 வரை நடந்த 16 தொடர்களில் 12ல் வென்று ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா 2 தொடர்களில் மட்டுமே வெல்ல, எஞ்சிய 2 தொடர்கள் டிராவில் முடிந்தன.

* 2002/03ம் ஆண்டுக்கு பிறகு நடந்த 8 தொடர்களையும் இந்தியாவே கைப்பற்றி உள்ளது.

* 2002/03க்கு பிறகு நடந்த 8 தொடர்களில் ஒரு டெஸ்டில் கூட வெ.இண்டீஸ் அணியால் வெற்றிபெற முடியவில்லை. இந்த தொடர்களில் நடந்த 23 ஆட்டங்களில் 14ல் இந்தியா வென்றது. மீதி 9 டெஸ்ட் டிராவில் முடிந்தன.

* இதுவரை 98 டெஸ்ட்களில் மோதியுள்ளதில் வெஸ்ட் இண்டீஸ் 30-22 என முன்னிலை வகிக்கிறது. 46 டெஸ்ட் சமனில் முடிந்தன.

*இந்தியா: ரோகித் (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), அஷ்வின், ஸ்ரீகர் பரத், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், ஜடேஜா, யாஷஷ்வி ஜெய்ஸ்வால், கோஹ்லி, சிராஜ், முகேஷ் குமார், அக்சர், நவ்தீப் சைனி, ஷுப்மன் கில், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனத்கட்.

வெஸ்ட் இண்டீஸ்: கிரெய்க் பிராத்வெய்ட் (கேப்டன்),ஜெர்மைன் பிளாக்வுட் (துணை கேப்டன்), அலிக் அதனேஸ், தேஜ்நரைன் சந்தர்பால், ரகீம் கார்ன்வால், ஜோஷுவா ட சில்வா, ஷனான் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கிர்க் மெக்கன்சி, ரேமன் ரீபர், கெமார் ரோச், ஜோமெல் வாரிகன்.

The post இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,West ,Indies ,Dominica ,West Indies ,Windsor Park ,Dinakaran ,
× RELATED உலகின் 3வது பொருளாதார நாடு யார்...