×

திடீரென அக்கா-தம்பி என பாசம் பொங்கியதின் காரணத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அனலாக பேசிய கனல் சிறைக்குள் மாட்டிக்கிட்டாரே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கனலான சினிமா ஸ்டன்ட் மாஸ்டர் மாற்று மதத்தினர் தொடர்பாக அடிக்கடி சர்ச்சையாக பேசியும், வீடியோக்களை வெளியிட்டும் அது தொடர்பான வழக்குகளில் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவ்வாறு நாகர்கோவிலில் ஒரு புகாரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்திருந்த நிலையில் அவரை சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு அழைத்தனர். விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் தகவல்களை பெற்றுவிட்டு அதிகாரி சென்றிருந்த நிலையில் அலுவலகத்தில் இருந்த ஸ்டன்ட் மாஸ்டரை தேடிவந்த அவரது இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தவாறே அலுவலகத்தில் இருந்து வெளியே அழைத்துவந்துவிட்டார்கள்.

பின்னர் எஸ்பி ஆபீஸ் வாசலில் வைத்து பேட்டி அளித்துக்கொண்டிருக்க அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ் அதிகாரியும் இங்கே நின்று பேட்டி கொடுக்காதீர்கள், வெளியே செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதன் பின்னர்தான் விசாரணை முடியவில்லை, என்ற தகவல் போலீசாருக்கு தெரியவர, விசாரணை முடியவில்லை, நீங்கள் உள்ளே வாருங்கள் என அழைத்து வந்துள்ளார்கள். இல்லை எனக்கு சாப்பிட வேண்டும், சுகர் பேஷன்ட் என்று ஸ்டன்ட் மாஸ்டர் கூற நாங்களே சாப்பாடு வாங்கித்தருகிறோம் என்று கூறி அலுவலகத்திற்கு அழைத்து வந்து கடைசியில் அரெஸ்ட் காண்பித்துள்ளார்கள். ஜாமினில் உடனே வெளிவராத பிரிவுகளில் எப்ஐஆர் போடப்பட்ட பின்னர் விசாரணைக்கு சென்றால் எப்படி வெளியே விடுவார்கள் என்று தாமரை கட்சியினர் தங்களுக்குள்ளாகவே கேள்வி எழுப்புகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திடீர்னு அக்கா – தம்பி பாசம் வரக் காரணம் என்ன..’’ என்று குறும்புச் சிரிப்போடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட தாமரை கட்சியில் தலைவர்களுக்கு இடையே ஈகோ பிரச்னை பெரிதாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்… மாவட்ட தலைவர் ஒருபக்கம், தேசிய மகளிர் அணி தலைவி இன்னொரு பக்கம் என மல்லுக்கட்டு நீடிக்கிறது. அத்துடன், கூட்டணிக்கு தலைமை தாங்கும் இலைக்கட்சி தலைவர்களிடமும் அனுசரித்து செல்வதில்லையாம். இலைக்கட்சி தலைவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும், அதை தாமரைக்கட்சியினர் உதாசீனப்படுத்தி விடுகிறார்களாம். இது தொடர்பாக கட்சியின் மாநில தலைமைக்கு புகார் பறந்தது. அவர், மாவட்டம் மற்றும் தேசியம் ஆகிய இருவரையும் அழைத்து, பல அறிவுரைகள் வழங்கியுள்ளார். இதனால், அம்மணி கடுப்பாகி போய்விட்டாராம். அதனால், மாநில தலைவர் கோவை வரும்போது, அவரது வருகையை புறக்கணித்து விடுகிறாராம்.

இந்த விவகாரம், கோவை தொகுதி முன்னாள் எம்.பி. கவனத்துக்கு சென்றுள்ளது. அவர், அம்மணியை அழைத்து, ‘‘எங்களுக்குள் எந்த பகையும் இல்லை. நாங்கள் அக்காள்-தம்பி உறவு போன்றவர்கள்’’ என பேட்டி அளிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அதன் எதிரொலியாகவே அம்மணி பேட்டி கொடுத்துள்ளார். அத்துடன், கோவை வந்த ஜார்கண்ட் கவர்னர், ‘‘இலைக்கட்சி தலைவர்களுடன் ஒத்துபோகாவிட்டால், நீ காணாமல் போய்விடுவாய்…’’ என அம்மணியை, விழா மேடையிலேயே நேருக்கு நேர் எச்சரித்துள்ளார். அதனால், அம்மணி, செம கடுப்பில் இருக்கிறாராம்….’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வேலை செய்யாமலே சம்பளம் வாங்குறாங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மத்திய சிறையில பிரச்னைக்கும், புகார் கடிதங்களுக்கும் பஞ்சமில்லை என்றே சொல்லலாம். தற்போது, முதல்வரின் தனி பிரிவு, சிறைத்துறை டிஜிபி, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிங்களுக்கு புகார் கடிதம் வந்துள்ளதாம். அந்த கடிதத்தில் மத்திய சிறையில காவலர்களாக உள்ள பிரேமானவர், சுரேஷமானவரும், சக்தியான வேலானவர் ஆகிய 3 பேரும் சிறையில நைட் டியூட்டி செய்யும் காவலர்களுக்கு வழங்கப்படும் ஸ்பெஷல் உணவுப்படியும் மிரட்டி வாங்கி கொள்கின்றனராம். குறிப்பாக பிரேமானவர் உளவுப்பிரிவில் இருப்பதால், மற்ற காவலர்களை மிரட்டி, இரவு பணி பார்க்காமலேயே, டியூட்டி பார்த்ததாக கூறி 3 பேரும் மாதம் தலா ரூ.1500 வாங்கி விடுறாங்களாம்.

மேலும் இடிஆர் சர்ச்சிங் அலவன்ஸ் என வருஷத்துக்கு ஒன்றரை லட்சம் அரசு பணம் வீண் விரயமாகி வருகிறதாம். இதில் பிரேமானவர் கடந்த 5 வருஷத்துக்கு மேலாக நைட் டியூட்டி அலவன்ஸ் வாங்கி வருகிறாராம். இதை எதிர்த்து கேள்வி கேட்ட மற்ற காவலர்களை மேலிடத்திற்கு பொய் புகார் அனுப்பி பழி வாங்குறாராம். இதற்கு நிரந்தர தீர்வே இல்லையா என மற்ற காவலர்கள் புலம்பி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கொடநாட்டை கடைசி ஆயுதமா எடுத்துட்டாரு போல தேனிக்காரரு..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் தேனிக்காரரை பின்னுக்கு தள்ளிட்டு சேலத்துக்காரர் தொடர்ந்து முன்னேறி போயிட்டிருக்காராம். எத்தனை தடைகள் வந்தாலும் அதனை உடைப்பேன் என சபதமிட்டு அவரது வெற்றிப்பயணம் தொடர்ந்துக்கிட்டு இருக்காம். ஆனா அவரை சுற்றிலும் ஊழல் உள்ளிட்ட நாலு க்கும் மேற்பட்ட வழக்குகளில் சுத்திக் கிட்டிருக்காராம்.

அதே நேரத்துல தேனிக்காரருக்கு தொட்டது எதுவுமே துலங்கலையாம். தற்போது அவர் எடுத்துள்ள கடைசி ஆயுதம் கொடநாடு கொலை வழக்காம். இலைக்கட்சியின் ஆட்சியின்போது துணை முதல்வராக இவர் தான் இருந்தாராம். அப்போ கொடநாட்டில் நடந்த சீக்ரெட் விவகாரமும் இவருக்கு தெரியுமாம். அதே போல சின்ன மம்மிக்கும் எல்லா விவரமும் தெரியுமாம். பங்களாவுக்குள் புகுந்த ஆசாமிகள் திருடிட்டு போயிருந்தா பணத்தையோ, வைர வைடூரியத்தையோ அள்ளிக்கிட்டு போயிருக்கலாம். ஆனா அங்கிருந்து எடுத்தது அனைத்தும் ஆவணங்களாம். அங்கிருந்து எடுத்ததை தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறைக்கு கொண்டு போனதோடு மட்டுமல்லாமல், அமலாக்கத்துறைக்கு போட்டும் கொடுத்து சின்ன மம்மிய சிக்க வச்சிட்டாங்களாம்.

பங்களாவில் இருந்தது எப்படி அப்பார்ட்மெண்டுக்கு வந்ததுன்னு சின்ன மம்மியே ஷாக்காயிட்டாங்களாம். அப்படின்னா திருடன் எங்கே இருக்கான்னு, துணை முதல்வரா இருந்த தேனிக்காரருக்கு தெரியாமலா போயிருக்கும் அப்படிங்குற கொஸ்டீனும் எழுந்திருக்காம். இதுபோன்ற ஆதாரங்களை வச்சிக்கிட்டுத்தான் தேனிக்காரர் இப்போ தனது கடைசி ஆயுதமா எழும்பியிருக்காராம். இந்த விவகாரத்துல தெரிந்த விவரத்தை சிபிசிஐயிடம் தைரியமா போய் சொல்லவேண்டியதுதானே என சேலத்துக்காரரின் மாங்கனி அடிப்பொடிகள் கேள்வி கேட்குறாங்க… இதை யோசிச்சவரு அதையும் யோசிக்காமலா இருப்பாருன்னு பதில் கொடுக்கிறாங்களாம் தேனியின் அடிப்பொடிகள்’’ என்றார் விக்கியானந்தா.

The post திடீரென அக்கா-தம்பி என பாசம் பொங்கியதின் காரணத்தை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Akka ,wiki Yananda ,Kanal ,Anal ,Akka-Tumbi ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!