
புதுடெல்லி: ‘டாடா சமூக அறிவியல் நிறுவனம் உட்பட 5 தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை இனி ஒன்றிய அரசே நியமனம் செய்யும்’ என அதிகாரிகள் கூறி உள்ளனர். பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைப்படி, தங்கள் ஆண்டு வருமானத்தை விட 50 சதவீதம் கூடுதல் நிதியை அரசிடம் இருந்து பெறும் நிகர்நிலைப் பல்கலைகழகங்களின் துணை வேந்தர்கள் அல்லது இயக்குநர், தலைவர்களை ஒன்றிய அரசே நியமிக்கும். அப்பதவியை பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் அறக்கட்டளைகளோ, சங்கங்களோ நியமிக்க முடியாது.
இதன்படி, மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் (டிஐஎஸ்எஸ்), ஆக்ராவின் தயால்பாக் கல்வி நிறுவனம், அகமதாபாத்தில் உள்ள குஜராத் வித்யாபித், கோவையில் உள்ள அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹோம் சயின்ஸ் அண்ட் ஹையர் எஜுகேஷன் ஃபார் ஹோம்ஸ், மற்றும் ஹரிதுவாரில் உள்ள குருகுல காங்க்ரி ஆகிய 5 பல்கலைக்கழங்களின் தலைவர்களை இனி ஒன்றிய அரசே நியமிக்க உள்ளதாக யுஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பல்கலைக்கழகங்களுக்கு எப்போதுமே நிதி உதவி வழங்குவதில் ஒன்றிய அரசே பிரதானமாக இருந்தாலும் அதன் சுய அதிகாரம் உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது அரசே அதன் தலைவர்களை நியமிப்பதற்கு என்ன உள்நோக்கம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
The post 5 தனியார் பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை இனி ஒன்றிய அரசு நியமிக்கும்: யுஜிசி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.