×

தேஜஸ்வி யாதவ் பதவி விலக வலியுறுத்தி பீகார் சட்டப்பேரவையில் 2ம் நாளாக பாஜ கடும் அமளி: அவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

பாட்னா: பீகார் சட்டப்பேரவை பாஜ உறுப்பினர்களின் கடும் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. பீகார் சட்டப்பேரவையின் 5 நாள் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது ரயில்வே பணி நியமன ஊழல் வழக்கு விவகாரத்தில் பீகார் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் பதவி விலக வலியுறுத்தி பாஜ உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. 2ம் நாளான நேற்று காலை 11 மணிக்கு அவை மீண்டும் கூடியது. அப்போது தேஜ்ஸ்வி யாதவ் பதவி விலக வலியுறுத்தி பாஜ உறுப்பினர்கள் கூச்சலிட்டு, அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்ட அவை 12 மணிக்கும் மீண்டும் கூடியபோதும், தேஜ்ஸ்வி யாதவ் கோரிக்கையை எழுப்பி பாஜவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பீகார் மாநில ஆசிரியர் நியமன திருத்த சட்டத்துக்கு எதிராகவும் அவர்கள் கூச்சலிட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரி, “ பாஜ உறுப்பினர்களின் செயல் கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.

பேரவைக்கு வௌியே செய்தியாளர்களிடம் பேசிய பாஜ சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் சரோகி, “தேஜ்ஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் அல்லது முதல்வர் நிதிஷ் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதுவரை சட்டப்பேரவையை நடத்த விட மாட்டோம்” என்று தெரிவித்தார். பாஜ உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக இரண்டுமுறை ஒத்தி வைக்கப்பட்ட பேரவை பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

The post தேஜஸ்வி யாதவ் பதவி விலக வலியுறுத்தி பீகார் சட்டப்பேரவையில் 2ம் நாளாக பாஜ கடும் அமளி: அவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Dejasvi Yadav ,Baja ,Kudu Amali ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...