×

அதிமுக முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ் ரூ.127.49 கோடி சொத்து குவிப்பு: 2 மகன்கள், நண்பர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் உணவு வழங்கல் துறை அமைச்சராக இருந்த போது, தனது பதவியை தவறாக பயன்படுத்தி அதிமுக மாஜி அமைச்சர் காமராஜ் ரூ.127.49 கோடி சொத்துகள் குவித்திருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காமராஜ், அவரது 2 மகன்கள், நண்பர்கள் மீது திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று காலை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் மற்றும் ஊழல் நடந்ததாக தொடர் புகார்கள் வந்தன. அதற்கான ஆதாரங்களுடன் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்தது. ஆனால் அப்போது அதிமுக ஆட்சி என்பதால் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் செய்த அனைத்து அமைச்சர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் தேர்தலின் போது உறுதியளித்தார். அதன்படி, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துகள் குவித்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் வீடுகள், நிறுவனங்கள், உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்க பணம், கிலோ கணக்கில் தங்க நகைகள், வெளிநாட்டு முதலீடுகள், கிரிப்டோ கரன்சி முதலீடுகள் என பல கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுதொடர்பான வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 7வது ஊழலில் சிக்கிய அதிமுகவின் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்எல்ஏவும், திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான காமராஜ், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தன. மேலும் உணவுத்துறை அமைச்சராக இருந்த 2015-21ம் ஆண்டுகளில் பாமாயில், பருப்பு ஆகியவற்றை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும், நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு தொடர்ந்து கொள்முதல் அனுமதி வழங்கியதாகவும் புகார்கள் வந்தது.

மேலும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி உணவுத்துறையில் தானியங்கள் மற்றும் பழங்கள் குளிர்சாதன கிடங்குகள் கட்டியது. குறிப்பிட்ட ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு மட்டும் தனது துறையில் உள்ள கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஊழலை உறுதிப்படுத்தும் வகையில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி காமராஜ் 500 சதவீதம் அளவுக்கு ரூ.58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 ரூபாய் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததற்கான அனைத்து ஆதாரங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதனடிப்படையில் முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ், இவரது மூத்த மகனான டாக்டர் இனியன், இளைய மகன் டாக்டர் இன்பன், இனியனின் மாமனாரான சந்திரசேகரன், காமராஜ் நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி, வக்கீலான உதயகுமார் உள்பட 6 பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சித்ரா கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

அதைதொடர்ந்து, நன்னிலம் எம்எல்ஏவான காமராஜ் வீடு, அலுவலகம் என திருவாரூர், திருச்சி, தஞ்சை, சென்னை, கோவை மற்றும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக காமராஜ் மகன்கள் சார்பில் கட்டப்பட்டு வரும் 7 மாடி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடம் உள்பட 51 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், காமராஜிக்கு சொந்தமான 51 இடங்களில் இருந்து ரூ.41.6 லட்சம் ரொக்க பணம், 963 சவரன் தங்க நகைகள், 23,960 கிராம் வெள்ளி பொருட்கள், ஐ-போன்கள், கணினிகள், பென் டிரைவ், ஹாட் டிஸ்க்குகள், பினாமிகள் பெயரில் வாங்கி குவிக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.15.50 லட்சம் ரொக்க பணம், வங்கி பெட்டக சாவி என வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக, காமராஜ் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் அவரது நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் உதவியுடன் தஞ்சையில் நார்ச் ஓட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சொத்துகள் வாங்கி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் அரவது மகன்களான இனியன், இன்பன் ஆகியோர் பெயரில் ‘ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர் (ஸ்ரீவாசுதேவபெருமாள் ஹெல்த் கேர் லிமிடெட்) என்ற பெயரில் ஓர் நவீன பன்னோக்கு மருத்துவமனையை கட்டியும், இதர வகைகளிலும் மொத்தம் 127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 ரூபாய் அளவிற்கு தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதற்கான ஆவணங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புலன் விசாரணை முடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் இசைவாணை பெற்றும், நேற்று திருவாரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான போலீசார் காமராஜ் அவரது மகன்கள் டாக்டர்கள் இனியன், இன்பன் மற்றும் நெருங்கிய கூட்டாளிகளான சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 மற்றும் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு சட்டம் 2018 மற்றும் ஐபிசி சட்டத்தின்படி உரிய பிரிவுகளின் கீழ் 810 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இவற்றுடன் 18,150 ஆவணங்களின் நகல்களும் தாக்கல் செய்தனர். அப்போது கோர்ட் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோர்ட்டுக்கு வரும் போது ஆவணங்களை இரும்பு பெட்டிகளில் வைத்து ஜீப்பில் ஏற்றி வந்தனர்.

* இதுவரை 3 பேர் மீது குற்றப்பத்திரிகை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மீது ரூ.35.79 கோடிக்கும், கே.பி.அன்பழகன் மீது ரூ.45.20 கோடிக்கும் சொத்து குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆதாரங்களுடன் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். தற்போது 3வதாக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது ரூ.127.49 கோடிக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post அதிமுக முன்னாள் உணவு துறை அமைச்சர் காமராஜ் ரூ.127.49 கோடி சொத்து குவிப்பு: 2 மகன்கள், நண்பர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Ex ,Food ,Minister ,Kamaraj ,Court ,Chennai ,Department ,Dinakaran ,
× RELATED கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8...