×

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து ரூ.1.50 கோடியில் வேலூர்-ஆற்காடு சாலை சீரமைப்பு பணி தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு

வேலூர்: வேலூர்- ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து, ரூ.1.50 கோடியில் சீரமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வேலூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துடன் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில் மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள், பழைய நகராட்சி எல்லைக்குள் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணி முடிவடைந்த நிலையில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன.

இந்நிலையில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர்-ஆற்காடு சாலையை ஒட்டிய காகிதப்பட்டறை, சாரதி நகர், எல்ஐசி நகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இத்திட்டத்தின் பிரதான பைப்லைன் இணைப்பு ஆற்காடு சாலையில் வருவதால் ஆற்காடு சாலையிலும் பாதாள சாக்கடை திட்டப்பணியும், அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணியும் நடந்தது.
இப்பணிகளால் சைதாப்பேட்டை முருகன் கோயில் தொடங்கி சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் நெடுஞ்சாலை இணைப்பு வரை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை குண்டும், குழியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வந்தது.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் இருந்து ரத்தினகிரியில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை தொடர்ந்து மருத்துவமனை பஸ்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த வாகனங்களும் குண்டும் குழியுமான சாலையில் செல்லும்போது நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண மாநில நெடுஞ்சாலைத்துறையும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டன. அதன் அடிப்படையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் சைதாப்பேட்டை முருகன் கோயில் தொடங்கி சத்துவாச்சாரி நெடுஞ்சாலையில் ஆற்காடு சாலை இணையும் பகுதி வரை சாலையை முழுமையாக புதிய தார்சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. காகிதப்பட்டறையில் இருந்து தொடங்கிய இப்பணி முதற்கட்டமாக பாதாளச்சாக்கடை திட்ட பைப்லைன் அமைக்கப்பட்ட பகுதியில் தார்சாலை போடப்பட்டு வருகிறது. இப்பணி முடிந்த பிறகு முழுமையாக சாலை போடப்பட உள்ளது.
இந்தபணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். இப்பணியை இன்னும் ஓரிரு நாட்களில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை சீரமைப்பு பணியால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்து ரூ.1.50 கோடியில் வேலூர்-ஆற்காடு சாலை சீரமைப்பு பணி தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Velur-Arkadam road ,Vellore ,Vellur-Arkudu Road ,Vellur-Arkudam Road ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...