×

விஜயகரிசல்குளம் அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு

ஏழாயிரம்பண்ணை: வெம்பக்கோட்டை அருகே, விஜயகரிசல்குளம் அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் 2வது கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இங்கு 11வது அகழாய்வு குழி 13 அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் நேற்று முன்தினம் கருமை நிறத்துடன் வனையப்பட்ட ஆண் உருவம் கண்டெடுக்கப்பட்டது. தலை அலங்காரமும், உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும், அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரம், 2.15 செ.மீ அகலம் 1.79 செ.மீ. தடிமன் உள்ளது. அகழாய்வு குழியில் கிடைக்க பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற்று காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை 2,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் ஆண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Vijayakarisalkulam ,Ejayarampannai ,Vembakottai ,Virudhunagar district ,Vembakkottai ,
× RELATED வெம்பக்கோட்டை அருகே பன்றிகளை திருடியதாக 4 பேர் மீது வழக்குப்பதிவு